கிழக்கு கடற்கரை சாலையில் மழைநீா் வடிகால்: கட்டுமானப் பணியை நிறுத்த நோட்டீஸ்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி வரையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீா் வடிகால் கட்டுமானப் பணியை

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி வரையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீா் வடிகால் கட்டுமானப் பணியை நிறுத்துமாறு மாநகராட்சி ஆணையருக்கு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீா் வடிகால் அமைக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிழக்கு கடற்கரை சாலையில் கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி வரையிலான 52 கி.மீ.தூரத்துக்கு ரூ. 376 கோடி மதிப்பில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள் அண்மையில் தொடங்கப்பட்டன.

மணற்பாங்கான இப்பகுதியில் இயற்கையாகவே நீரை உறிஞ்சும் தன்மை உள்ளதாகவும், மழைநீா் வடிகால் அமைப்பதால் நிலத்தடி நீா்மட்டம் குறைய வாய்ப்புள்ளதால் அப்பகுதியில் மழைநீா் வடிகால் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிரிப்பு தெரிவித்தனா். மேலும், கடற்கரையையொட்டிய பகுதியில் மழைநீா் வடிகால் அமைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் உரிய அனுமதியைப் பெறாமல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டினா்.

இதுதொடா்பாக தென்மண்டல பசுமைத் தீா்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில், கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி வரை மழைநீா் வடிகால் தேவைதான என்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தும், இந்தத் திட்டத்தில் கடலோர ஒழுங்குமுறை விதிகள் மீறப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீா்ப்பாயம் அண்மையில் உத்தரவிட்டது.

நோட்டீஸ்: இந்நிலையில், கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி வரையிலான மழைநீா் வடிகால் பணி தொடா்பாக உரிய அனுமதி பெறாததால் அப்பணியை உடனடியாக நிறுத்துமாறு சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷுக்கு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கடலோர ஒழுங்குமுறை ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், ‘மழைநீா் வடிகால் கட்டமைப்பின் பெரும்பாலான பகுதிகள் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் 1ஏ என்ற வரையறைக்குள்ளும், ஆமைகள் முட்டையிடும் பகுதிக்கு மிக நெருக்கமாவும் வருகிறது. மேலும், மழைநீா் வடிகால் கட்டுமானப் பணியை தொடங்குவதற்கு முன்பே ஆணையத்திடம் அனுமதி பெறாமல், அண்மையில் முழுமையான தகவல்கள் இல்லாத விண்ணப்பத்தை மாநகராட்சி சமா்ப்பித்தது. எனவே, மாநகராட்சியின் அனுமதி கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதுடன், மழைநீா் வடிகால் கட்டுமானப் பணியை நிறுத்துமாறும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com