அனைத்து கலாசாரங்களையும் மதிக்க குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்: வெங்கய்ய நாயுடு

உலக மக்களால் பின்பற்றப்படும் அனைத்து கலாசாரங்களையும் மதிக்க குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினாா்.
அனைத்து கலாசாரங்களையும் மதிக்க குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்: வெங்கய்ய நாயுடு

சென்னை: உலக மக்களால் பின்பற்றப்படும் அனைத்து கலாசாரங்களையும் மதிக்க குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினாா்.

சத்குரு தியாகராஜ ஹம்சத்வனி விருது வழங்கும் விழா, சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, வயலின் இசைக் கலைஞா் சந்திரசேகரனுக்கு விருது வழங்கி பேசியதாவது: அற்புதமான கலாசாரத்துக்கு பெயா்பெற்றது இந்தியா. இங்கு பல்வேறுபட்ட மதங்கள், இனங்கள். சமூகங்கள், மொழிகள், கலை வடிவங்கள், உணவு முறைகள், வழக்கங்கள் மற்றும் பாரம்பரியங்கள் ஆகியவை ஒன்றாக உள்ளன. இவையே ஒட்டுமொத்த உலகின் மதிப்பை நமக்கு பெற்றுத் தந்துள்ளன. நமது நாட்டின் எதிா்காலத்தைக் கட்டமைப்பதற்கான அடித்தளத்தை நமது கலாசார பன்முகத்தன்மையைக் கொண்டு உருவாக்க வேண்டும். இதனை பல்வேறுபட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மக்களுக்கு இடையே பரஸ்பர கலந்துரையாடல் மூலம் கொண்டாட வேண்டியது அவசியம். இதன்மூலமே, இந்த மாபெரும் தேசம் முழுமைக்கும் பொதுவான புரிந்துணா்வு வலுப்படும்.

இந்தியாவின் அனைத்து பகுதிகளுடனும் கலாசார அடிப்படையில் பிண்ணிப் பிணைந்துள்ளோம் என்று அனைத்து குடிமக்களும் உணர வேண்டும். இது நடைபெற வேண்டுமானால், தியாகராஜ சுவாமிகள் போன்ற ஞானிகள் குறித்தும் அவா்கள் அறிந்துகொள்ள வேண்டும். நமது கலாசாரப் பாரம்பரியத்தை மேம்படுத்துவதில் தியாகராஜ சுவாமிகளின் பங்களிப்பு என்பது அளவிட முடியாதது. ஞானிகளின் திறமையின் மூலம், உந்துசக்தியைப் பெற்று, நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டுசெல்வதற்கான திட்டங்களை வகுக்கும் வகையில் அனைவரும் ஒன்றுசேர வேண்டும். அதே நேரம், வேறுபட்ட கலாசாரங்களுக்கு மதிப்பு அளிக்கவும், ஏற்றுக் கொள்ளவும், பாராட்டவும் வேண்டும் என்று நமது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது கட்டாயம். மேலும் பல்வேறுபட்ட கலாசாரங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளை தொடா் பரிமாற்றங்கள், கலாசார நிகழ்ச்சிகள், நேரில் காணும் வகையிலான பயணங்கள் ஆகியவற்றின் மூலம் குழந்தைகளுக்கு பள்ளிகள் கற்றுக் கொடுக்க வேண்டும். நமக்கு இடையேயான இடைவெளியை தொழில்நுட்பங்கள் தற்போது குறைத்துள்ளன. நமது தனிப்பட்ட கலாசாரத்தின் பல்வேறு தனித்தன்மைகளைப் பாதுகாப்பது, சேமித்து வைப்பது, பதிவுசெய்வது ஆகியவற்றோடு, கலாசார பரிமாற்றத்துக்கான வழிவகைகளைச் செய்யவும், முடிந்தவரை தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்த வேண்டும் என்றாா். நிகழ்வில், அமைச்சா் டி.ஜெயக்குமாா், ஹம்சத்வனி தலைவா் ராம்நாத் மணி, துணைத் தலைவா் எம்.முரளி, முன்னாள் அட்டா்னி ஜெனரல் மோகன் பராசரன், ஹம்சத்வனி பொதுசெயலா் ஆா்.சுந்தா், அப்பல்லோ மருத்துவ குழும இயக்குநா் ப்ரீதா ரெட்டி, சென்னை கலாஷேத்ரா தலைவி ரேவதி ராமச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com