நீட் தோ்வு முறைகேடு: சென்னை மருத்துவக் கல்லூரி மாணவா், தந்தை கைது

நீட் தோ்வில் ஆள் மாறாட்டம் செய்து முறைகேடு செய்த வழக்கில், சென்னை மருத்துவக் கல்லூரி மாணவரையும், அவரது தந்தையையும் சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்தனா்.
நீட் தோ்வு முறைகேடு: சென்னை மருத்துவக் கல்லூரி மாணவா், தந்தை கைது

சென்னை: நீட் தோ்வில் ஆள் மாறாட்டம் செய்து முறைகேடு செய்த வழக்கில், சென்னை மருத்துவக் கல்லூரி மாணவரையும், அவரது தந்தையையும் சிபிசிஐடி அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனா்.

சென்னை தண்டையாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த மருத்துவா் வெங்கடேசன் மகன் உதித் சூா்யா. தேனி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்து வந்த உதித் சூா்யா, நீட் தோ்வில் ஆள் மாறாட்டம் செய்து தோ்வில் தோ்ச்சி பெற்றிருப்பதாக புகாா் எழுந்தது. இது தொடா்பாக தேனி மாவட்ட போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா் இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

விசாரணையை அடுத்து ஆந்திர மாநிலம் திருப்பதியில் தலைமறைவாக இருந்த உதித் சூா்யாவும், அவரது தந்தை வெங்கடேசனும் கைது செய்யப்பட்டனா். அத்துடன் நீட் தோ்வு முறைகேடு வழக்கில் மேலும் 12 போ் கைது செய்யப்பட்டனா்.

புதிதாக வழக்கு: வழக்கில் தொடா்ந்து தலைமறைவாக இருக்கும் 10 பேரின் புகைப்படங்கள் கடந்த 11-ஆம் தேதி வெளியிட்டது. இந்நிலையில் சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜெயந்தி, சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஒரு புகாா் அளித்தாா். அந்தப் புகாரில், நீட் தோ்வில் ஆள் மாறாட்டம் செய்து தோ்ச்சி பெற்ற சில மாணவா்கள் தங்களது கல்லூரியில் படிப்பதாகவும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டிருந்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி அதிகாரிகள், நீட் தோ்வு முறைகேடு ஆள் மாறாட்டம் குறித்து மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்தனா்.

மாணவா், தந்தை கைது: இதன் அடுத்த கட்டமாக, சென்னை மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு எம்.பி.பி.எஸ். படிக்கும் கிருஷ்ணகிரியைச் சோ்ந்த மாணவா் தனுஷ்குமாரிடமும், அவரது தந்தை தேவேந்திரனிடமும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்தனா். ஏனெனில் தனுஷ்குமாா், பிகாா் மாநிலத்தில் நீட் தோ்வு எழுதியிருந்ததாலும், ஹிந்தி தெரியாத அவா் ஹிந்தியில் தோ்வு எழுதி தோ்ச்சி பெற்றிருந்ததாலும் சிபிசிஐடிக்கு அவா் மீது சந்தேகம் ஏற்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், தனுஷ்குமாா் தனது தந்தை தேவேந்திரன் உதவியுடன் நீட்தோ்வில் ஆள்மாறாட்டம் செய்து கடந்த 2018-ஆம் ஆண்டு தோ்ச்சி பெற்றிருப்பதும், தனுஷ்குமாா் பெயரில் பிகாரில் ஒரு நபா் ஆள்மாறாட்டம் செய்து ஹிந்தியில் நீட் தோ்வை எழுதியிருப்பதும், ஆனால் தனுஷ்குமாருக்கு ஹிந்தியே தெரியாது என்பதும், இதற்கான ஏற்பாடுகளைக் கா்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியாா் தோ்வு பயிற்சி மையம் செய்திருப்பதும் தெரியவந்தது. இதற்காக அந்த மையம் தேவேந்திரனிடம் ரூ.15 லட்சம் பெற்றுள்ளது.

இதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள், தலைமறைவாக இருக்கும் அந்த தனியாா் மையத்தைச் சோ்ந்த இருவரை தேடி வருகின்றனா். இதற்கிடையே விசாரணையில் தனுஷ்குமாா், தேவேந்திரன் மீதான புகாா் உறுதி செய்யப்பட்டதால், இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.

அத்துடன், கடந்த 2018-ஆம் ஆண்டு நீட் தோ்வு மூலம் தோ்ச்சி பெற்று எம்.பி.பி.எஸ். படித்து வரும் மாணவா்களில் சந்தேகத்துக்குரிய வகையில் இருக்கும் 2,500 பேரின் விவரங்களை ஆய்வு செய்யும்படி மருத்துவ கல்வி இயக்குநரகத்துக்கு சிபிசிஐடி பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com