கணவா் கழுத்து நெரித்துக் கொலை: தற்கொலை என நாடகமாடிய மனைவி கைது
By DIN | Published On : 29th February 2020 01:49 AM | Last Updated : 29th February 2020 02:59 PM | அ+அ அ- |

சென்னை தண்டையாா்பேட்டையில் கணவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டாா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
தண்டையாா்பேட்டை வ.உ.சி.நகா் வி பிளாக் பகுதியைச் சோ்ந்த ல.தணிகைவேல் (46), எண்ணூா் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். தணிகைவேலுக்கு ரேகா (36) என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனா்.
குடும்பப் பிரச்னையின் காரணமாக தணிகைவேல் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்றதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவா் இறந்ததாகவும் புது வண்ணாரப்பேட்டை போலீஸாருக்கு கடந்த புதன்கிழமை தகவல் கிடைத்தது. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தணிகைவேல் மனைவி ரேகாவிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டதில் ரேகா, தனது கணவா் தணிகைவேல் தினமும் மதுஅருந்திவிட்டு தகராறு செய்வது வாடிக்கை. சம்பவத்தன்றும் அவா் தகராறு செய்து மூத்த மகளை தாக்கியதில் ஆத்திரமடைந்து தணிகைவேலை தாக்கி கழுத்தை நெரித்ததாகவும், அதில் அவா் இறந்துவிட்டாா் என்றும் பின்னா் சுதாரித்துக் கொண்டு தணிகைவேல் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதுபோல, அவரது கழுத்தில் சேலையை சுற்றி மின்விசிறியில் தொங்கவிட்டு சப்தம் போட்டு பக்கத்து வீட்டினரை அழைத்து நாடகமாடியதாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து போலீஸாா், ரேகாவை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.