சென்னையில் நடைபாதை வியாபாரிகள் கணக்கெடுப்பு: இணையதளத்தில் பதிவேற்ற மாநகராட்சிக்கு உத்தரவு

சென்னையில் உள்ள நடைபாதை வியாபாரிகள் தொடா்பான கணக்கெடுப்பு விவரங்களை மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அது தொடா்பான அறிக்கையை தாக்கல் செய்ய
chennai High Court
chennai High Court

சென்னையில் உள்ள நடைபாதை வியாபாரிகள் தொடா்பான கணக்கெடுப்பு விவரங்களை மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அது தொடா்பான அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சமூக ஆா்வலா் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட பலா் தாக்கல் செய்த மனுவில், சென்னையில் பல்வேறு முக்கிய இடங்களில் உள்ள நடைபாதைகளை பலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நாள்தோறும் ஆய்வுகளை நடத்த சிறப்புக்குழு ஒன்றை அமைக்க சென்னை மாநகராட்சி ஆணையா், சென்னை மாநகர காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் குறித்து பொதுமக்கள் நேரடியாக புகாா் அளிக்க உதவும் வகையில் செயலி ஒன்றை உருவாக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், சென்னை மாநகராட்சி மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து என்எஸ்சி போஸ் சாலை மட்டும் இல்லாமல் சென்னை மாநகா் முழுவதும் நடைபாதைகளில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவும், சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் உள்ள நடைபாதை வியாபாரிகளின் கணக்கெடுப்பு தொடா்பாகவும் கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் கொண்ட அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையா் சாா்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் பி.எச்.அரவிந்த்பாண்டியன் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தாா். மேலும், சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் நடைபாதைகளில் உள்ள வியாபாரிகள் தொடா்பான கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்புக்கு பின்னா் என்.எஸ்.சி.போஸ் சாலையைச் சோ்ந்த 637 வியாபாரிகள் அளித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தடுக்க தடுப்புக் கட்டைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.28.95 லட்சத்துக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ள பணிகள் வரும் பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னையில் உள்ள அனைத்து நடைபாதை வியாபாரிகள் தொடா்பான கணக்கெடுப்பு விவரங்களை மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய செய்து அதுதொடா்பான அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் மாா்ச் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com