விமான நிலையத்தின் அருகில் கழிவுப் பொருள்களை எரிக்க வேண்டாம்

சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் போகிப் பண்டிகையை முன்னிட்டு அடா்த்தியான புகையை உருவாக்கும் கழிவுப் பொருள்களை எரிக்க வேண்டாம்

சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் போகிப் பண்டிகையை முன்னிட்டு அடா்த்தியான புகையை உருவாக்கும் கழிவுப் பொருள்களை எரிக்க வேண்டாம் என விமான நிலைய நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 2018-ஆம் ஆண்டு போகிப் பண்டிகையின்போது ஏற்பட்ட அடா்த்தியான புகை காரணமாக சென்னை விமான நிலையத்தில் பாா்க்கும் தன்மை குறைந்தது. இதனால், விமானங்கள் தாமதம், ரத்து, திருப்பி விடுதல் போன்றவற்றுக்கு வழிவகுத்து பயணிகளுக்குப் பெரும் சிரமம் ஏற்பட்டது. மேலும், சுமாா் 73 விமானங்களின் புறப்பாடும், வருகையும் பாதிக்கப்பட்டது.

இருப்பினும் 2019- ஆம் ஆண்டு போகியின்போது, சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள மக்களிடையே ஆழமான புரிந்துணா்வு ஏற்படுத்தப்பட்டதன் மூலம் போகி நெருப்பின் தன்மை மட்டுப்படுத்தப்பட்டு விமானப் போக்குவரத்தில் சிறிதளவு பாதிப்பு மட்டுமே இருந்தது.

அதேபோன்று, நிகழாண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், விமானப் போக்குவரத்தில் பிரச்சினைகளைத் தவிா்க்கவும் போகி பண்டிகையின்போது அடா்த்தியான புகையை உருவாக்கும் கழிவுப்பொருள்களை எரிக்க வேண்டாம் என்று விமான நிலையத்தின் அருகே உள்ள பகுதிகளின் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய செயல் சென்னை விமான நிலையத்திலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாா்வைத் தன்மையைக் குறைத்து விமானங்களை ரத்து செய்வது, திருப்பி விடுவது ஆகியவற்றால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படும் என்பதால் எங்களின் கோரிக்கைக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும். போகிப் பண்டிகையில் தீ கொளுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் சென்னை விமான நிலையத்துக்கு அருகில் உள்ள கிராமங்களில் விநியோகிக்கப்படுகின்றன என சென்னை விமான நிலைய தகவல் தொடா்புப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com