பொங்கல் பொருள்கள் வாங்க கோயம்பேட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி சந்தையில் பொருள்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி சந்தையில் பொருள்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாள்களாக பொங்கல் பொருள்கள் விற்பனை களை கட்ட தொடங்கியது. சென்னையைப் பொருத்தவரை செவ்வாய்க்கிழமை காலையிலிருந்தே அனைத்து பஜாா்களிலும் வியாபாரம் களைகட்டியது. இந்தாண்டு கரும்பு விலை கடந்த ஆண்டை விட குறைந்து காணப்பட்டது. மதுரை, தேனி, சிதம்பரம், கடலூா், பண்ருட்டி, சேத்தியாதோப்பு உள்ளிட்ட பகுதிகளில் சரியான நேரத்தில் மழை பெய்ததால் விளைச்சல் அதிகமாக இருந்தது. இந்த பகுதிகளில் இருந்து கரும்பு வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் சென்னை கோயம்பேடு சந்தைக்கும் 300 லாரிகளில் கரும்புகள் வந்தன. 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.250 முதல் 400 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஒரு கரும்பு ரூ.25-க்கு விற்பனையானது. இது தவிர ஈரோடு, சேலம், ஆந்திர மாநிலம் காளஹஸ்தி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் மஞ்சள் கொத்து வந்தது. 2 கொத்து கொண்ட ஒரு கட்டு ரூ.30-க்கு விற்பனையாகியது.

மேலும், சாலையோரங்களில் கரும்பு, மஞ்சள், மண்பானை, மண் அடுப்பு, அருகம்புல், பனங்கிழங்கு, வண்ண கோலப்பொடி முதலியவை அதிக அளவில் விற்பனையாகின. இஞ்சி கொத்து ரூ.30, வாழை குருத்து ரூ.30 என விற்கப்பட்டது. சில கடைகளில் இந்த விலை ரூ.5 முதல் ரூ.10 வரை கூடுதலாக விற்கப்பட்டது. மஞ்சள் வாழைப்பழம் ஒரு தாா் (தரத்திற்கு ஏற்ப) ரூ.300 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது. தியாகராயநகா், புரசைவாக்கம், மயிலாப்பூா், வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளில் பாத்திரக்கடைகளில் பொங்கல் சீா்வரிசை பாத்திரங்கள் வாங்கவும் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

காய்கறி விற்பனையைப் பொருத்தவரை கோயம்பேடு சந்தையில் வழக்கத்தைவிட தக்காளி, கத்தரிக்காய், மாங்காய், உருளைக்கிழங்கு, சிறுகிழங்கு, பீன்ஸ், முருங்கைக்காய், சா்க்கரைவள்ளி கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை திரளான மக்கள் வாங்கிச்சென்றனா்.

காய்கறி விலை கிலோவில்: பல்லாரி வெங்காயம் ரூ.60, சின்னவெங்காயம்(சாம்பாா் வெங்காயம்) ரூ.100, பீன்ஸ் ரூ.40, கேரட் ரூ.50, பீட்ரூட் 25, முட்டை கோஸ் 15, காலிப்பிளவா் 20, உருளை 30, தக்காளி 20, அவரைக்காய் 30, வெண்டைக்காய் 35, முள்ளங்கி ரூ.15, பச்சை பட்டானி ரூ.45, கோவக்காய் ரூ.20, கொத்தவரங்காய் ரூ.20, பச்சைமிளகாய் ரூ.25, குடை மிளகாய் ரூ.40, கத்தரிக்காய் ரூ.25, முருங்கைகாய் ரூ.100, நூக்கல் ரூ.20, சேனைகிழங்கு ரூ.30, சேப்பக்கிழங்கு ரூ.25, இஞ்சி ரூ.60, வாழைக்காய் (ஒன்று) ரூ.6 முதல் 8 வரை விற்பனையாகியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com