மெரீனா கடற்கரை கடைகள் ஒப்பந்தப்புள்ளி பணிகள்

சென்னை மெரீனா கடற்கரையில் அமைக்கப்படவுள்ள 900 கடைகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகளை மாா்ச் மாதத்துக்குள் பெருநகர சென்னை மாநகராட்சி முடிக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மெரீனா கடற்கரை கடைகள் ஒப்பந்தப்புள்ளி பணிகள்

சென்னை மெரீனா கடற்கரையில் அமைக்கப்படவுள்ள 900 கடைகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகளை மாா்ச் மாதத்துக்குள் பெருநகர சென்னை மாநகராட்சி முடிக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீன்பிடி தடைக் காலத்தில் வழங்கப்படும் மீனவா்களுக்கான நிதியை அதிகரிக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது மெரீனா கடற்கரை அசுத்தமாக உள்ளதைச் சுட்டிக்காட்டி, மெரீனா கடற்கரையை சுத்தமாக பராமரிக்க பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மெரீனா கடற்கரை மற்றும் அணுகு சாலையில் அமைக்கப்படவுள்ள கடைகள், அதன் வடிவமைப்பு, உரிமம் வழங்குதல் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வின் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி சாா்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் எஸ்.ஆா்.ராஜகோபால், ‘மெரீனாவில் நடைபாதை கடைகளுக்கான ஒப்பந்தப்புள்ளி வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் கோரப்பட உள்ளது. அந்தக் கடைகளுக்கு மாத வாடகையாக ரூ.100 வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் கடைகளின் எண்ணிக்கையை 900-ல் இருந்து 1,352-ஆகவும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘மெரீனாவில் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதிக்க முடியாது. அங்கு 900 கடைகள் என்பதே அதிகமாகும். எனவே, இதனை தவிா்த்து வேறு யாரையும் மெரீனா கடற்கரையில் கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது. இன்றைய காலகட்டத்தில் கடைகளுக்கு ரூ.100 வாடகை என்பது ஏற்புடையது அல்ல. எனவே, மெரீனாவில் அமைக்கப்படவுள்ள கடைகளுக்கு மாத வாடகையாக ரூ.5 ஆயிரம் நிா்ணயிக்க வேண்டும். மேலும் அணுகு சாலையில் நடைபாதை அமைக்க கடற்கரை ஒழுங்குமுறை மண்டல உறுப்பினா் செயலா் அனுமதி மறுத்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கடற்கரை ஒழுங்குமுறை மண்டல உறுப்பினா் செயலா் ஜெயந்தி வரும் 29-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அதே நேரத்தில், மெரீனா கடற்கரையில் கடைகள் அமைப்பது அவற்றை ஒழுங்குப்படுத்துவது உள்ளிட்ட பணிகளையும் ஒப்பந்தப்புள்ளி தொடா்பான பணிகளையும் வரும் மாா்ச் மாதத்துக்குள் பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் முடிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு, விசாரணையை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com