ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வருவதைத் தடுக்கும் ஆக்கிரமிப்புகள்

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு வார்டுகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து செல்வதற்குத்
தெருவோரத்தில் வசிக்கும் மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு உள்ளாகி வரும் ஸ்டான்லி மருத்துவமனையின் கிழக்கு நுழைவு வாயில் சாலை.
தெருவோரத்தில் வசிக்கும் மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு உள்ளாகி வரும் ஸ்டான்லி மருத்துவமனையின் கிழக்கு நுழைவு வாயில் சாலை.

திருவொற்றியூர்: அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு வார்டுகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து செல்வதற்குத் தடையாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.    

தமிழகத்தின் பழைமையான மருத்துவனைகளில் ஒன்றான  சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவனையில் தினமும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளி, உள் நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். வடசென்னை பகுதி ஏழை எளிய மக்கள் அதிகமானோர் வசிக்கும் பகுதி என்பதால், இப்பகுதி மக்களுக்கு ஸ்டான்லி மருத்துவமனை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. ஆனால், பழைமையான மருத்துவமனை என்பதால் பெருகி வரும் நோயாளிகளுக்கு ஏற்ப புதிய வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் இடப்பற்றாக்குறை ஒரு பிரச்னையாக இருந்து வருகிறது.  

இந்நிலையில் ஸ்டான்லி மருத்துவமனை, கல்லூரி நுழைவு வாயில்கள் என பல பகுதிகளும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில்தான் உள்ளன. 

200 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிறப்பு வார்டு: இந்நிலையில், இங்குள்ள பழைய பிரதான கட்டடத்தில் கரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கென தரைத்தளத்தில் வரவேற்பு அறை, கரோனா பரிசோதனை மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. முதல் தளத்தில் சுமார் 200 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வடசென்னையில் குறிப்பாக ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், பெரம்பூர் மண்டலங்களைச் சேர்ந்த நோயாளிகள் இங்குதான் அழைத்து வரப்படுகின்றனர். மேலும் இரண்டு தனியார் கல்லூரிகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளையும் ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் பராமரித்து வருகிறது. 

கிழக்கு நுழைவு வாயில் வழியாக தினமும் ஏராளமான ஆம்புலன்ஸ் வாகனங்கள் அடிக்கடி வந்து செல்கின்றன. மேலும், கரோனா பரிசோதனைக்கு வரும் பொதுமக்களும் இதே வழியைத்தான் பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர்.  

ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் அவசர வழி: ஆனால், சிறப்பு வார்டுக்கு வந்து செல்லும் அவசர வழி முழுவதுமே சாலையோரத்தில் வசிக்கும் மக்களால் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில்தான் உள்ளது. மேலும்  இவர்கள் அங்கேயே சமையல் செய்து குடித்தனம் நடத்தி வருகின்றனர்.  

மேலும், ஆம்புலன்ஸ் செல்லும் குறுகலான சாலையில் ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  சாதாரண நாள்களில் அவ்வளவாக பிரச்னை ஏதும் இல்லாததால் மருத்துவமனை நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தற்போது கரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள அவசர நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த ஆக்கிரமிப்புகளையெல்லாம் உடனடியாக அகற்ற வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பலமுறை காவல்துறையினரிடம் புகார்களை தெரிவித்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

மேலும் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் கல்லீரல் அவசரச் சிகிச்சைப் பிரிவு கட்டடம் அருகிலேயே குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு கழிப்பறைகள் (இ-டாய்லெட்)  அனைத்தும் செயல்படாமல் துர்நாற்றம் வீசுகின்றன. இவற்றை உடனடியாக இங்கிருந்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இது குறித்து ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் கூறியது:
ஸ்டான்லி மருத்துவமனையைப் பொருத்தவரை சிகிச்சை அளிப்பதில் எவ்வித குறைபாடும் இல்லை. ஆனால், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையுடன் ஒப்பிடும்போது ஸ்டான்லியில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. மேலும், இடப்பற்றாக்குறையும் உள்ளது. இந்நிலையில் நுழைவு வாயில்கள் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு உள்ளாகி வருவது வேதனை அளிக்கிறது. மருத்துவக் கல்லூரிக்கும் மருத்துவமனைக்கு இடையே சுரங்கப் பாலம் உள்ளது. முக்கிய சாலையான இதனை மாணவர்களும், மருத்துவர்களும் கடந்து செல்வது என்பது மிகுந்த சிரமமாகவும், ஆபத்தானதாகவும்  இருந்து வருகிறது. எனவே இங்கு தானியங்கி நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்து வருகிறது. எனவே ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து வரும் கட்டமைப்புக் குறைபாடுகள், ஆக்கிரமிப்புகள், குப்பைத் தொட்டிகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

உரிய துறைகளிடம் வலியுறுத்தியும் பயனில்லை: இது குறித்து ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையர் டாக்டர் பி.பாலாஜி கூறியது: 
கரோனா சிறப்பு வார்டுகளில் தனிக் கவனம் செலுத்தி, தொடர்ந்து பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம். அவசரகால அடிப்படையில் மருத்துவர்கள், பணியாளர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம். ஆனால், இதர அரசுத் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புகளைப் பெறுவதில் சற்று சுணக்கம் இருப்பது உண்மைதான். கட்டமைப்பு வசதிகள் குறைபாடு, ஆக்கிரமிப்பாளர்கள் பிரச்னை, மாநகராட்சிக் குப்பைத் தொட்டிகளால் ஏற்பட்டு வரும் சீர்கேடுகள் உள்ளிட்டவை குறித்து எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இது குறித்து காவல்துறை உயரதிகாரிகளிடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது என்றார் டாக்டர் பாலாஜி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com