அத்தியாவசியப் பொருள்களை குறைந்த விலையில் வழங்க வேண்டும்

அத்தியாவசியப் பொருள்கள் குறைந்த விலையில் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. 

சென்னை: அத்தியாவசியப் பொருள்கள் குறைந்த விலையில் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. 
இது தொடர்பாக அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்ற மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று, ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளே இருந்து தங்களது முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் சட்டப்பேரைவையை நடத்துவதன் மூலம் அரசு மற்றும் அதிகாரிகளின் கவனம் பேரவைப் பணிகளிலே இருப்பதற்கான வாய்ப்புள்ளது. 
எனவே, பேரவைக் கூட்டத்தை உடனடியாக ஒத்திவைத்து அரசு நிர்வாகம் முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். நாடு முழுவதும் மார்ச் 31-ஆம் தேதி வரை தனிமைப்படுத்தி முடக்குமாறு மத்திய அரசு அறிவித்த மாவட்டங்களில், சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களும் அடங்கும். கரோனா வைரஸ் மேலும்  பரவாமல் தடுப்பதற்கு இந்த நடவடிக்கை உதவும். 
ஆனால் வெளியூர் செல்ல முடியாமல் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும். வேலைக்கு செல்ல முடியாமல் வருமான இழப்பில் தவிக்கும் கட்டுமானத் தொழிலாளர்கள், தினக்கூலி உழைப்பாளிகள், அன்றாடம் வருமானம் ஈட்டக் கூடியவர்கள், ஆட்டோ மற்றும் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 5,000-ஐ உடனடியாக வழங்க வேண்டும்.  தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு அத்தியவாசியப் பொருள்கள் தங்கு தடையின்றி குறைந்த விலையில் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com