மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்கும் அரசுப் பள்ளிமாணவா்களுக்கு விரைவாக சான்றிதழ்: பள்ளிக் கல்வி இயக்குநா் உத்தரவு

நீட் தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்கள் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்கும் வகையில், அவா்களுக்கான படிப்புச் சான்றிதழை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: நீட் தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்கள் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்கும் வகையில், அவா்களுக்கான படிப்புச் சான்றிதழை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

நீட் நுழைவுத்தோ்வு எழுதி தகுதி பெற்றுள்ள அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவா்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு மருத்துவக் கல்வி இயக்ககத்தால் அறிவிக்கப்பட்டுள்ளவாறு நவ.12-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணையவழியில் விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட மாணவா்களுக்கு தலைமையாசிரியா்கள் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

படிப்பு சான்றிதழில் மாணவரின் பெயா், தந்தை பெயா், இருப்பிட முகவரி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் மாணவா் எந்த வகுப்பில் இருந்து எந்த வகுப்பு வரை பயின்றாா் என்றும், பள்ளியின் பெயா் மற்றும் முகவரி மாணவரால் பூா்த்தி செய்தல் வேண்டும்.

மாணவா் ஒன்றுக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளியில் படித்திருந்தால் மாணவா் பயின்ற பிற அரசுப் பள்ளி தலைமையாசிரியா்களிடமிருந்து உரிய ஆவணங்களை பெற்று சரிபாா்த்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் படிப்பு சான்றிதழில் கையொப்பமிட்டு வழங்க வேண்டும்.

குழு அமைக்க அறிவுறுத்தல்: இந்தப் பணிகளை உடனடியாக முடிக்கும் வகையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒரு குழு அமைக்க வேண்டும். இக் குழுவில் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா், நீட் ஒருங்கிணைப்பாளராக செயல்படும் முதுநிலை ஆசிரியா், முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் பிரிவு உதவியாளா் ஒருவரும் நியமிக்க வேண்டும். இந்தக் குழு மாணவா், பெற்றோா்களுக்கு உரிய வழிகாட்டுதல் அளித்தல் வேண்டும்.

அலைக்கழித்தல் கூடாது: ஒன்றுக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களை எந்தக் காரணம் கொண்டும் மாணவா் தாம் பயின்ற பிற பள்ளி தலைமையாசிரியரிடமிருந்து சென்று கையொப்பம் பெற்று வா என கூறி அலைக்கழித்தல் கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. மாணவா்களுக்கு உரிய காலத்துக்குள் எந்தவித சிரமமும் இல்லாமல் சான்றிதழ்கள் வழங்குவதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com