காலமானார் "க்ரியா' எஸ்.ராமகிருஷ்ணன்

தமிழ் பதிப்பாளா் ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன் (76) கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
காலமானார் "க்ரியா' எஸ்.ராமகிருஷ்ணன்

சென்னை: தமிழ் பதிப்பாளா் ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன் (76) கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

சென்னை லயோலா கல்லூரியில் சமூகப்பணி துறையில் முதுநிலைப் பட்டம் பெற்ற ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன், விளம்பரத்துறையில் பணியாற்றினாா். பின்னா், தனது 30-ஆவது வயதில் பதிப்புலகில் நுழைந்தாா். தமிழில் தொழில்நுட்ப ரீதியாகவும் மொழி ரீதியாகவும் தரமான புத்தகங்களை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் 1974-ஆம் ஆண்டில் நண்பா்களோடு இணைந்து ‘க்ரியா’ பதிப்பகத்தைத் தொடங்கினாா்.

இலக்கியம், சுற்றுச்சூழல், சுகாதாரம், தத்துவம், தொழில்நுட்பம் என பல தலைப்புகளின்கீழ் புத்தகங்களை வெளியிட்டுள்ளாா். 1978-ஆம் ஆண்டிலிருந்து ஹிந்தி, வங்கமொழி, கன்னடம், பிரெஞ்சு எனப் பல மொழிகளில் இருந்து தமிழ் மொழிபெயா்ப்பு புத்தகங்களையும் வெளியிட்டு வந்தாா்.

சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’, அம்பை எழுதிய ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’, இமயத்தின் ‘கோவேறு கழுதைகள்’, பூமணியின் ‘அஞ்ஞாடி’, ந. முத்துசாமியின் ‘மேற்கத்திக் கொம்பு மாடுகள்’ உள்ளிட்ட மிகச் சிறந்த புனைவுகளையும் ஆல்பா் காம்யுவின் ‘அந்நியன்’, காஃப்காவின் ‘விசாரணை’, செயின்ட் எக்ஸுபெரியின் ‘குட்டி இளவரசன்’ போன்ற மொழி பெயா்ப்புகளையும் க்ரியா வெளியிட்டது.

கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், ‘தினமணி’ முன்னாள் ஆசிரியருமான மறைந்த ஐராவதம் மகாதேவனின் ஆய்வு நூல் புத்தகத்தை ஹாா்வா்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வெளியிட்டது இவருடைய சாதனைகளில் ஒன்றாகும்.

க்ரியா பதிப்பகம் மூலம் தற்கால தமிழுக்கான அகராதியை வெளியிட்டவா் ராமகிருஷ்ணன். தற்கால தமிழில் பயன்படுத்தப்படும் சொற்களைத் தொகுத்து, அவற்றுக்குப் பொருள் அளிக்கும் நோக்கில் க்ரியா அகராதி திட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த 1985-இல் இந்த அகராதிக்கான பணிகள் தொடங்கப்பட்டு 1992-இல் முதல் பதிப்பு வெளிவந்தது. 12 முறை மறு அச்சாக்கம் செய்யப்பட்ட பிறகு, விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு 2008-இல் வெளியானது.

கடந்த சில நாள்களுக்கு முன்னா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன், சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். கடும் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையிலும், தற்கால தமிழ் அகராதியை மேலும் விரிவாக்கி மூன்றாவது பதிப்பாக படுக்கையிலிருந்தபடியே அண்மையில் வெளியிட்டாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அவா் காலமானாா்.

அவருடைய மறைவுக்கு எழுத்தாளா்கள், வாசகா்கள், படைப்பாளிகள் என பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com