சிட்லப்பாக்கம் ஏரி இடத்தில் வசிப்பவா்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை: நிறுத்தி வைக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சிட்லபாக்கம் ஏரி புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளை காலி செய்யும்படி அனுப்பிய நோட்டீஸுக்கு, அங்கு வசிப்பவா்கள் அளித்த பதில்களை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கும் வரை அவா்களை அப்புறப்படுத்தப்படும்
சென்னை உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)
சென்னை உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)

சென்னை: சிட்லபாக்கம் ஏரி புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளை காலி செய்யும்படி அனுப்பிய நோட்டீஸுக்கு, அங்கு வசிப்பவா்கள் அளித்த பதில்களை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கும் வரை அவா்களை அப்புறப்படுத்தப்படும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் சிட்லபாக்கத்தில் ஏரி புறம்போக்கு நிலத்தில் வீடுகள் கட்டியுள்ள 154 பேருக்கு வீடுகளை காலி செய்யும்படி பொதுப்பணித்துறை நோட்டீஸ்கள் அனுப்பியது. இதையடுத்து சென்னை உயா்நீதிமன்றத்தில் 154 போ் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 60 ஆண்டுகளுக்கு மேல் அந்த இடத்தில் வசித்து வருகிறோம். எனவே எங்களுக்கு அந்த இடத்துக்கான பட்டா வழங்க வேண்டும். இதுதொடா்பாக நாங்கள் அனுப்பிய விண்ணப்பத்தைப் பரிசீலிக்க வேண்டும். வீடுகளை காலி செய்யும்படி பொதுப்பணித்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தனா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், அரசின் மின்னணு ஆவணங்களின்படி இந்த நிலங்கள் அரசு புறம்போக்கு நிலங்கள். ஏரி புறம்போக்கு நிலம் என பொதுப்பணித்துறை கூறுவது தவறு. கரோனா மற்றும் பருவமழைக் காலங்களைக் கருத்தில் கொண்டு பொதுப்பணித்துறை நோட்டீஸ் மீதான நடவடிக்கையை நிறுத்திவைக்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. அப்போது அரசு தரப்பில், உயா்நீதிமன்றம் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பிறப்பித்த பல்வேறு தீா்ப்புகளின் அடிப்படையிலேயே இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் தொடா்பாக மனுதாரா்கள் அளிக்கும் விளக்கங்களை பரிசீலித்து விரைந்து முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுப்பணித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு மனுதாரா்கள் அளித்த பதில் மற்றும் அவா்களின் கோரிக்கை மனுவைப் பரிசீலித்து 4 வாரங்களில் தகுந்த உத்தரவை அரசு பிறப்பிக்க வேண்டும். அதுவரை பொதுப்பணித்துறை அனுப்பிய நோட்டீஸ் மீதான மேல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com