எம்.பி.பி.எஸ்.}பி.டி.எஸ். கலந்தாய்வு: இன்று 363 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு

எம்.பி.பி.எஸ்.}பி.டி.எஸ். படிப்புகளுக்கான இரண்டாம் நாள் (வியாழக்கிழமை) கலந்தாய்வில் பங்கேற்க 363 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்.} பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான அனுமதிக் கடிதத்தைப் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுடன்  கலந்துரையாடிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.  உடன் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், டி.ஜெயக்குமார்.
எம்.பி.பி.எஸ்.} பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான அனுமதிக் கடிதத்தைப் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், டி.ஜெயக்குமார்.

சென்னை: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளுக்கான இரண்டாம் நாள் (வியாழக்கிழமை) கலந்தாய்வில் பங்கேற்க 363 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை யும்அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வின் முதல் நாளான புதன்கிழமை அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டு இடங்களில் 235 இடங்கள் நிரப்பப்பட்டன. அவர்களில் 18 பேருக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான அனுமதிக் கடிதத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வழங்கி வாழ்த்தினார்.
ஏழை-எளிய குடும்பங்களைச் சேர்ந்த பல மாணவர்களின் மருத்துவக் கனவை தமிழக அரசு நனவாக்கியிருப்பதாக அவர்தம் பெற்றோர்கள் அப்போது நன்றிப் பெருக்குடன் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் இடங்கள் போக 3,032 எம்.பி.பி.எஸ். இடங்களும், 165 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன. இதைத் தவிர 15 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,147 எம்.பி.பி.எஸ். இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 953 எம்.பி.பி.எஸ். இடங்களும் உள்ளன. 
18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,065 பி.டி.எஸ். இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 695 பி.டி.எஸ். இடங்களும் இருக்கின்றன. அவற்றுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது.
அந்த வகையில் நிகழாண்டுக்கான கலந்தாய்வு சென்னை நேரு விளையாட்டரங்கில் புதன்கிழமை தொடங்கியது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு  அடிப்படையில் முதல் நாளில் 270 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். மருத்துவப் பரிசோதனைகள், சான்றிதழ் பரிசோதனைகளுக்குப் பிறகு கலந்தாய்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.  மாணவர்களுக்கு கரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது. கலந்தாய்வு நடைபெறும் இடங்களில் ஆங்காங்கே தானியங்கி கிருமி நாசினி தெளிப்பான்கள் நிறுவப்பட்டிருந்தன. 
சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முன்னிலையில், கலந்தாய்வு நடைபெற்றது. சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்வி இயக்குநர் டாக்டர் கே.நாராயணபாபு, மருத்துவக்கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் செல்வராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தரவரிசையில் முதல் இடம் பிடித்த மாணவர் ஜீவித்குமார், அதற்கு அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த அன்பரசு, திவ்யதர்ஷினி, குணசேகரன், பூபதி, சிவரஞ்சினி, சூர்யலட்சுமி ஆகியோர் சென்னை மருத்துவக் கல்லூரியைத் தேர்வு செய்தனர்.
8-ஆவது இடம் பிடித்த இந்திராதேவி ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியையும், தொடர்ச்சியாக சரத்குமார், ரம்யா ஆகியோர் சென்னை மருத்துவக் கல்லூரியையும் தேர்ந்தெடுத்தனர். 
மொத்தமாக 262 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர். அதில், 228 எம்.பி.பி.எஸ். இடங்களும், 7 பி.டி.எஸ். இடங்களும் நிரம்பின.
முதல் நாள் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைத் தேர்வு செய்த 18 பேருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி  கல்லூரியில் சேருவதற்கான அனுமதிக் கடிதத்தை வழங்கினார். அதனுடன், மருத்துவர்கள் அணியும் வெள்ளை  அங்கி, ஸ்டெதஸ்கோப், உடற்கூறியல் உபகரணங்கள் அடங்கிய பெட்டகத்தையும் அவர்களுக்கு வழங்கினார்.
மாணவர்களுக்கு அறிவுரைகளையும், வாழ்த்துகளையும் வழங்கிய முதல்வர் பழனிசாமி, அவர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு நன்றி என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட வண்ண பலூன்களை அரசுப் பள்ளி மாணவர்கள் பறக்கவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கண்ணீரால் நிரம்பிய கலந்தாய்வுக் கூடம்!

கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைப் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களில் பலர், தங்களது மருத்துவர் கனவு நிறைவேறியதை எண்ணி உணர்ச்சிவசப்பட்டு அழுதனர். அவர்களது பெற்றோரும் ஆனந்தக் கண்ணீர் விட்டதைக் காண முடிந்தது.

அனைத்திலும் உச்சமாக  திண்டுக்கல்லைச் சேர்ந்த சக்திவேல் என்பவர், தனது மகள் அர்ச்சனாவுக்கு மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைத்ததற்காக  முதல்வரின் கால்களில் விழுந்து நன்றி தெரிவித்தார். நா தழுக்க தழுக்க அவர் பேசியது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. முதல்வர் முன்னிலையில் சக்திவேல் பேசியதாவது:

நான் ஒரு கூலித்தொழிலாளி. எனது மகளை மருத்துவராக்க வேண்டும் என் ற ஆசை எனக்குள் இருந்தது. ஆனால், அரசுப் பள்ளியில் படிக்க வைக்க மட்டுமே முடிந்த என்னால், எப்படி அவளை மருத்துவராக்க முடியும் என நினைத்து தினமும் வருத்தப்பட்டேன். இந்நிலையில், அரசு அறிவித்த இந்த 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் இந்த சமூகத்தில் எனது மகளும் மருத்துவராவது சாத்தியமாகியுள்ளது. இதற்காக எனது குடும்பமே அரசுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணமான தமிழக முதல்வர் நூறாண்டுகள் வாழ வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com