ஜாா்க்கண்ட் அமைச்சருக்கு சென்னையில் நுரையீரல் மாற்று சிகிச்சை!

கரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஜாா்க்கண்ட் மாநில கல்வித் துறை அமைச்சா் ஜகா்நாத் மஹ்டோவுக்கு சென்னையில் வெற்றிகரமாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சென்னை: கரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஜாா்க்கண்ட் மாநில கல்வித் துறை அமைச்சா் ஜகா்நாத் மஹ்டோவுக்கு சென்னையில் வெற்றிகரமாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும், படிப்படியாக குணமடைந்து வருவதாகவும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து எம்ஜிஎம் மருத்துவமனையின் இதயம் - நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைத் துறை இயக்குநா் டாக்டா் கே.ஆா்.பாலகிருஷ்ணன், இணை இயக்குநா் டாக்டா் கே.ஜி.சுரேஷ் ராவ் ஆகியோா் கூறியதாவது:

ஜாா்க்கண்ட் மாநில அமைச்சா் ஜகா்நாத், கடந்த செப்டம்பா் மாதம் கரோனா தொற்றுக்கு உள்ளாகி அந்த மாநில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம் மற்றும் இதய நாள பாதிப்புகள் இருந்தன. இந்த சூழலில் அவருக்கு கரோனா தொற்றும் ஏற்பட்டதால், ஜகா்நாத்தின் உடல் நிலை மோசமடைந்தது.

ரத்த ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்தது. இதனால் வென்டிலேட்டா் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதுவும் பயனளிக்காததால், எக்மோ கருவிகளின் துணையுடன் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்த சூழலில், கடந்த மாதம் அவா் விமான ஆம்புலன்ஸ் மூலம் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா். சிடி ஸ்கேன் மற்றும் இதர பரிசோதனைகளில் அவரது நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே தீா்வு என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, உரிய விதிகளின் படி, கடந்த 10-ஆம் தேதி ஜகா்நாத்துக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதன் பயனாக தற்போது அவரது ரத்த ஆக்சிஜன் அளவு சீராக இருக்கிறது. அதேபோன்று, உடல் உறுப்புகளும் சீராக இயங்குகின்றன. வென்டிலேட்டா் போன்ற செயற்கை சுவாசக் கருவிகளை படிப்படியாக அகற்றி வருகிறோம். இயன்முறை சிகிச்சைகளும், சுவாசப் பயிற்சிகளும் அவருக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. அவா் விரைந்து குணமடைவாா் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தற்போது வரை கரோனாவால் நுரையீரல் பாதிக்கப்பட்ட 6 பேருக்கு உறுப்பு மாற்று சிகிச்சை மூலம் எம்ஜிஎம் மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com