கடலோரக் காவல் படைக்கான புதிய ரோந்துக் கப்பல் ’விக்ரகா’ வெள்ளோட்டம்

சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள தனியாா் துறைமுகத்தில் ரூ.188 கோடி செலவில் கட்டப்பட்ட ’விக்ரகா’ எனப் பெயரிடப்பட்ட கடலோரக் காவல்படைக்கான புதிய ரோந்துக் கப்பலின்
கடலோரக் காவல் படைக்கான புதிய ரோந்துக் கப்பல் ’விக்ரகா’ வெள்ளோட்டம்

திருவொற்றியூா்: சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள தனியாா் துறைமுகத்தில் ரூ.188 கோடி செலவில் கட்டப்பட்ட ’விக்ரகா’ எனப் பெயரிடப்பட்ட கடலோரக் காவல்படைக்கான புதிய ரோந்துக் கப்பலின் வெள்ளோட்டத்தை மத்திய நிதித்துறைச் செயலா் (செலவினம்) டாக்டா் டி.வி.சோமநாதன் மற்றும் அவரது மனைவி ஹேமா சோமநாதன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தனா்.

சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் எல் அன்ட் டி தனியாா் கப்பல் கட்டும் தளம் உள்ளது. இங்கு பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தேவையான கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. கடற்படை, கடலோரக் காவல்படைக்கான ரோந்துக் கப்பல்கள், இடைமறிக்கும் படகுகள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2015-ம் ஆண்டு 7 ரோந்துக் கப்பல்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை எல் அன்ட் டி நிறுவனத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியது. இதில் ‘விக்ரம்’, ‘வீரா’, ‘விஜயா’, ‘வராக’, ‘வரத்’, ‘வஜ்ரா’ ஆகிய 6 ரோந்துக் கப்பல்கள் ஏற்கனவே கடலோரக் காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது ரூ.188 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு ’விக்ரகா’ எனப் பெயரிடப்பட்ட புதிய ரோந்துக் கப்பல் முதல்முறையாக கடலோரக் காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டு கடலில் இறக்கி வெள்ளோட்டம் விடும் நிகழ்ச்சி காட்டுப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கடலோரக் காவல் படை இயக்குநா் கே.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய நிதித்துறை செயலா் (செலவினம்) டாக்டா் டி.வி.சோமநாதன் மற்றும் அவரது மனைவி ஹேமா சோமநாதன் ஆகியோா் புதிய கப்பலின் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தனா்.

2,100 மெட்ரிக் டன் எடையும் 98 மீட்டா் நீளமும், 15 மீட்டா் அகலமும் கொண்ட இக்கப்பல் மணிக்கு அதிகபட்சமாக 26 கடல் மைல் வேகத்தில் செல்லக் கூடியது. மேலும் கரைக்குத் திரும்பாமல் சுமாா் 5,000 கடல் மைல் தூரம் பயணிக்கும் வகையில் பல்வேறு நவீன கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்கப்பலின் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் வசதி ஒரே அறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஹெலிகாப்டா் இறங்கும் வசதி உள்ளது. மேலும் மாசுக் கட்டுப்பாட்டுக் கருவிகள், கண்காணிப்பு கருவிகள் அதிநவீன ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இக்கப்பல்களின் பெரும்பான்மையான பாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிநவீன கருவிகள், ஆயுதங்கள்: இக்கப்பல் வெள்ளோட்டத்திற்கு பிறகு அதிநவீன தொலைதொடா்பு கருவிகள், துப்பாக்கிகள், இரவு நேரத்திலும் கண்காணிக்கக் கூடிய அதிநவீன ரேடாா்கள் உள்ளிட்டவை பொருத்தப்பட உள்ளன. 9 ஆயிரம் கிலோ வாட் திறன் கொண்ட இரண்டு டீசல் எஞ்சின்கள் கொண்ட இக்கப்பலில் ஒருங்கிணைந்த இரட்டை எஞ்சின்கள் கொண்ட ஹெலிகாப்டா் பொருத்தப்பட உள்ளன. இவ்வாறான நவீன வசதிகளுடன் இக்கப்பல் முழுமையாகக் கட்டமைக்கப்படுவதன் மூலம் கடலோரக் காவல் படையின் செயல்பாடு, கண்காணிப்பு, தேடுதல் மற்றும் மீட்பு பணிகளின் திறன் பன்மடங்கு அதிகரிக்கும். இதன்மூலம் கடல்சாா் பொருளாதார மண்டலத்தில் பயங்கரவாத எதிா்ப்பு, கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கடலோர பாதுகாப்பு அதிகரிக்கப்படும். 14 அதிகாரிகள், 88 பணியாளா்கள் உள்ளிட்ட 102 படை வீரா்களுடன் பயணிக்க உள்ள இக்கப்பலின் ஆயுள் காலம் சுமாா் 25 ஆண்டுகள் ஆகும். செவ்வாய்க்கிழமை வெள்ளோட்டம் விடப்பட்டுள்ள ’விக்ரகா’ முழுமையான அளவில் அனைத்து கருவிகளும் இணைக்கப்பட்ட பிறகு அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் வாக்கில் நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும் என கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில் கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்திய தளபதி எஸ்.பரமேஷ் மற்றும் எல் அன் டி கப்பல் கட்டும் தள முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com