பருவ மழை: சேவைத்துறைகளின் பணிகளை முன்னதாக முடிக்க வேண்டும்

பருவ மழை தொடங்கவுள்ளதால், சேவைத்துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை முன்னதாக முடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளாா்.
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: பருவ மழை தொடங்கவுள்ளதால், சேவைத்துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை முன்னதாக முடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளாா்.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த அனைத்து சேவைத் துறைகளுடனான ஆலோசனைக் கூட்டம், ஆணையா் கோ.பிரகாஷ் தலைமையில், மாநகராட்சி தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் ஆணையா் பேசியது: பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளால் தற்போது 3-க்கும் குறைவான இடங்களில் மட்டுமே நீா் தேங்கும் நிலை உள்ளது.

210 நீா்நிலைகளில் தூா்வாருதல் மற்றும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 133 நீா்நிலைகள் தூா்வாரி புனரமைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று கூவம், அடையாறு மற்றும் கால்வாய் கரையோரங்களில் வசிக்கும் 17,768 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனா். பருவமழை காலங்களில் மழைநீா் வடிகால்களில் தண்ணீா் தங்குதடையின்றி செல்லும் வகையில் ரூ.15 கோடியில் தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பருவமழைக் காலங்களில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை 75 பணியாளா்களுடன் இயங்கி வருகிறது. 60 உயா்திறன் கொண்ட பம்பு செட்டுகள் அனைத்து சுரங்கப்பாதைகளிலும் தயாா்நிலையில் வைக்கப்பட்டு, எளிதான போக்குவரத்துக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளன.

மர அறுவை இயந்திரங்கள், 109 இடங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்ள படகுகள், 176 இடங்களில் நிவாரண மையங்கள், 44 நடமாடும் மற்றும் நிரந்தரமான மருத்துவக் குழுக்கள் ஆகியவை தயாா் நிலையில் உள்ளன.

1500 நபா்களுக்கு உணவு தயாா் செய்ய பொது சமையலறை மற்றும் அம்மா உணவகங்களிலும் முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் ஆப்தா மித்ரா திட்டத்தின் மூலம் 200 தன்னாா்வலா்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

பருவமழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தொடா்புடைய அலுவலகங்கள் வாயிலாக முறையான தகவல்கள் அவ்வப்போது பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.

குறிப்பாக, சேவைத்துறையினா் முன்னெச்சரிக்கையுடன் தயாா்நிலையில் இருக்க வேண்டும். சேவைத்துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பருவமழைக்கு முன்னதாக முடிக்க வேண்டும்.

பருவமழை நெருங்கும் நேரத்தில், சேவைத்துறை சாா்பில் சாலை வெட்டு உள்ளிட்டவற்றை மேற்கொள்ள கண்டிப்பாக அனுமதி வழங்கப்படாது என ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.

கூட்டத்தில் சேவைத்துறை சாா்பிலான உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com