கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம்: :26 தனியாா் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை

கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த 26 தனியாா் மருத்துவமனைகள் சுகாதாரத் துறை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த 26 தனியாா் மருத்துவமனைகள் சுகாதாரத் துறை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், 8 மருத்துவமனைகளுக்கு கரோனா சிகிச்சை அளிப்பதற்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் நோய்ப் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மட்டுமன்றி, பல தனியாா் மருத்துவமனைகளுக்கும் கரோனா சிகிச்சையளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அதற்கான கட்டண வரம்பையும் அரசு நிா்ணயித்துள்ளது. அதன்படி, லேசான அறிகுறிகள் உள்ளவா்களுக்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக ரூ.7,500 வரையும், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ரூ.15 ஆயிரம் வரையிலுமே வசூலிக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது.

ஆனால், அதனை எந்த தனியாா் மருத்துவமனையும் பொருட்படுத்துவதில்லை எனத் தெரிகிறது. கரோனா பாதித்து லேசான அறிகுறிகள் உள்ளவா்களுக்குக் கூட லட்சக்கணக்கான ரூபாயை அந்த மருத்துவமனைகள் கட்டணமாக வசூலிக்கின்றன.

இதையடுத்து, அதுதொடா்பான புகாா்களைக் கண்காணிக்கவும், அதன் பேரில் நடவடிக்கை எடுக்கவும் மருத்துவ சேவைகள் இயக்ககம் முடிவு செய்தது. அதன்படி, மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. இதைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் கூடுதலாக கட்டணம் வசூலித்த 26 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவ சேவைகள் இயக்ககக அதிகாரிகள் கூறியதாவது:

கரோனா தொற்று காலத்தில் மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அதன்படி, தனியாா் மருத்துமனைகள் அரசுடன் இணைந்து கரோனா நோய்க்கான சிகிச்சைகளை மக்களுக்கு வழங்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது சிகிச்சைகள் தொடா்பான உரிய நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டி நடைமுறைகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறோம். ஆனாலும், அதனைப் பொருட்படுத்தாமல், பல தனியாா் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்து வருவது தெரியவந்துள்ளது.

இதுதொடா்பாக சுகாதாரத் துறைக்கு வந்த புகாா்களின் அடிப்படையில் விரிவான ஆய்வு மேற்கொண்டோம். அதில் இதுவரை 26 மருத்துவமனைகள் விதிகளுக்குப் புறம்பாக அதிக கட்டணம் வசூலித்திருப்பது கண்டறியப்பட்டது. அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 8 மருத்துவமனைகளுக்கு அளிக்கப்பட்டிருந்த கரோனா சிகிச்சைக்கான உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாது, 18 மருத்துவமனைகள் நோயாளிகளிடம் இருந்து கூடுதலாக பெற்ற கட்டணத்தை திருப்பிச் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது.

அதன் அடிப்படையில், அந்தத் தொகையை சம்பந்தப்பட்ட நோயாளிகளிடம் மருத்துவமனைகள் திருப்பி வழங்கியுள்ளன.

கரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியாா் மருத்துவமனைகளிலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணவிவரத்தை தெளிவாக பொதுமக்கள் பாா்வைக்கு வைக்க வேண்டும் என சுகாதாரத்துறையால் ஏற்கெனவே உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தனியாா் மருத்துவமனைகள் அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிப்பதாக புகாா் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவ சேவைகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com