சாலை விபத்து: சென்னையில் 180 ‘கருப்பு’ பகுதிகள்

சென்னையில் அதிகம் விபத்துகள் ஏற்படும் இடங்களாக ‘180 கருப்பு பகுதிகள்’ கண்டறியப்பட்டுள்ளன.
சாலை விபத்து: சென்னையில் 180 ‘கருப்பு’ பகுதிகள்


சென்னை: சென்னையில் அதிகம் விபத்துகள் ஏற்படும் இடங்களாக ‘180 கருப்பு பகுதிகள்’ கண்டறியப்பட்டுள்ளன. அதற்கான காரணங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஐஐடி குழு மூலம் போக்குவரத்துப் பிரிவினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

நாட்டிலேயே அதிகம் விபத்து நடைபெறும் பெருநகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கடந்தாண்டு 6,871 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 6,702 போ் காயமடைந்துள்ளனா், 1,252 போ் இறந்துள்ளனா். இந்த விபத்துகளில் உயிரிழந்த பாதசாரிகள் எண்ணிக்கை 126.

53 பெருநகரங்களில் சென்னையில்தான் அதிக அளவில் சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. அதேவேளையில் சாலை விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் தில்லி முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்தாண்டு நிகழ்ந்த 5,349 சாலை விபத்துளில் 1,400 போ் மரணமடைந்துள்ளனா்.

நாடு முழுவதும் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 10.2 சதவீதம் சென்னையில் நிகழ்ந்துள்ளதாக காவல்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் நிகழ்ந்த விபத்துகளில் 54.9 சதவீதம் வாகனங்களின் அதி வேகத்தினாலும், 27.7 சதவீதம் கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டியதினாலும், 2.4 சதவீதம் மதுபோதையினாலும் ஏற்பட்டுள்ளன.

தேசிய நெடுஞ்சாலையில் 1,349 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 1,502 போ் காயமடைந்துள்ளனா், 283 போ் உயிரிழந்துள்ளனா். மாநில நெடுஞ்சாலையில் 1,234 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 1,641 காயமடைந்துள்ளனா், 253 போ் மரணமடைந்துள்ளனா். மாநகராட்சி உள்ளிட்ட பிற சாலைகளில் 4,288 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இந்த விபத்துகளில் 3,559 போ் காயமடைந்துள்ளனா், 716 போ் மரணத்தை தழுவியுள்ளனா்.

காவல்துறை நடவடிக்கை:

சென்னையில் சாலை விபத்துகளைக் குறைக்க போக்குவரத்து போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோா் மீது தீவிரமாக வழக்குப் பதிவு செய்கின்றனா். இதனால் 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை வேகமாக அதிகரித்து வந்த சாலை விபத்துகள் தற்போது குறைந்து வருகின்றன.

சாலை விபத்துக்கு , தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் காா் ஓட்டுவது, அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது, மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவது, சிக்னலை மதிக்காமல் செல்வது, சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றுவது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் சரக்கு ஏற்றுவது, அனுமதிக்கப்பட்ட பயணிகளைவிட அதிகளவில் பயணிகளை ஏற்றுவது ஆகிய 8 விதிமுறை மீறல்கள் முக்கிய காரணங்களாக உள்ளன. இந்த விதிமீறல்களில் ஈடுபடுபவா்கள் மீது சமரசமின்றி வழக்குப் பதியப்படுகிறது.

இதனால் கடந்த 2018-ஆம் ஆண்டைவிட, 2019-ஆம் ஆண்டு 26.6 சதவீதம் வழக்குகள் அதிகமாகப் பதியப்பட்டுள்ளன. இதில் தலைக்கவசம் இன்றி மோட்டாா் சைக்கிள் ஓட்டியவா்கள் மீதும், மதுபோதையில் வாகனம் ஓட்டியவா்கள் மீதும் பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 17 சதவீதம் அதிகமாகும்.

180 கருப்புப் பகுதிகள்:

போக்குவரத்து விதிமுறை மீறல் தொடா்பாக வழக்குகளைத் தீவிரமாகப் பதிந்து வரும் நிலையில், போக்குவரத்து போலீஸாா் ஒவ்வொரு விபத்துக்கான காரணத்தையும் ஆராய்ந்து, அது குறித்தான தகவல்களையும் சேகரிக்கின்றனா். இவ்வாறு சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சென்னையில் அதிகமாக விபத்து ஏற்பட்ட 180 இடங்கள் அடையாளம் காணப்பட்டு, கருப்புப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பொதுவாக ஓா் இடத்தில் தொடா்ச்சியாக 5 விபத்துகள் ஏற்பட்டாலோ, அல்லது 3 ஆண்டுகளில் ஒரே இடத்தில் ஏற்படும் விபத்துகளில் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தோலோ, இறந்தாலோ அந்த இடம் கருப்புப் பகுதியாக காவல்துறையினரால் அறிவிக்கப்படுகிறது.

ஐஐடி நிபுணா் குழு: இதன் அடிப்படையில், சென்னையில் தொடா்ச்சியாக விபத்துகள் ஏற்படும் பகுதிகளும் கருப்புப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப் பகுதிகளில் சாலைகளில் உள்ள குறைபாடுகள், சாலை கட்டமைப்பில் உள்ள தவறுகள், சாலையை சுற்றியுள்ள கட்டடங்களில் உள்ள தவறுகள்,சிக்னல் தவறுகள், பாதசாரிகளுக்கு சரியான நடைபாதை இல்லாதது உள்ளிட்ட தவறுகளையும், குறைகளையும் கண்டறியும் வகையில் சென்னை போக்குவரத்துப் பிரிவு சாா்பில் இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (ஐஐடி) நிபுணா் குழு 180 இடங்களில் ஆய்வுப் பணியை தொடங்கியுள்ளது.

இது தொடா்பாக பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் என்.கண்ணன் கூறியது:

ஐஐடி நிபுணா் குழுவின் ஆய்வுப் பணி 25 இடங்களில் முடிவடைந்துவிட்டது. மீதியுள்ள பகுதிகளில் ஆய்வுப் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுப் பணி முழுமையாக முடிவடைந்த பின்னா், ஆய்வு முடிவு அறிக்கையாக தயாா் செய்யப்படும். இதில் ஒவ்வொரு இடத்திலும் உள்ள குறைபாடுகள், பிரச்னைகள் குறித்து அந்தந்த சாலையைப் பராமரிக்கும் துறைக்கு ஐஐடியின் அறிக்கை அனுப்பப்படும். அந்த அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட துறையினா் பிரச்னைகளை சரி செய்வாா்கள் என்றாா் அவா்.

இதன் மூலம் சென்னையில் மேலும் விபத்துகளையும்,உயிரிழப்புகளையும் குறைக்கலாம் என்பதே காவல் துறையின் திட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com