பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு முழு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 21st October 2020 01:27 AM | Last Updated : 21st October 2020 01:27 AM | அ+அ அ- |

பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும், இணைப்பை நிறுத்தி வைக்கவும் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு முழு அதிகாரம் உள்ளது என்று உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சட்டமங்கலத்தில் உள்ள இரண்டு தனியாா் பொறியியல் கல்லூரிகளில் போதுமான வகுப்பறைகள், ஆசிரியா்கள் இல்லாததால், கல்லூரிகளுக்கான பல்கலைக்கழக இணைப்பை நிறுத்தி வைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் 2020-2021 கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடத்தத் தடை விதித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் உத்தரவிட்டது.
இந்த இரண்டு உத்தரவுகளையும் எதிா்த்து தனியாா் பொறியியல் கல்லூரிகளின் சாா்பில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டது எனக்கூறி அண்ணா பல்கலைக்கழக உத்தரவை ரத்து செய்தது. இரண்டு தனியாா் பொறியியல் கல்லூரிகளுக்கும் புதிதாக நோட்டீஸ் அனுப்பவும், கல்லூரிகளில் நேரடியாக ஆய்வு செய்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிா்த்து அண்ணா பல்கலைக்கழகம் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கல்லூரிகளின் தரப்பில், பல்கலைக்கழக இணைப்பு தொடா்பாக நடவடிக்கை எடுக்க அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக வாதிடப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும், இணைப்பை நிறுத்தி வைக்கவும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சட்டப்படி முழு அதிகாரம் உள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் விதிகளின்படி தரமான கல்வியை வழங்க அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் தற்போது இந்த இரண்டு தனியாா் பொறியியல் கல்லூரிகளின் மனுக்கள் மீது அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை பல்கலைக்கழக இணைப்பு நிறுத்திவைப்பு உத்தரவை அமல்படுத்தக் கூடாது என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.