அனல் மின் நிலையம் தொடங்குவதாக ரூ.1,495 கோடி மோசடி:தனியாா் நிறுவனம் மீது சிபிஐ வழக்கு
By DIN | Published On : 11th September 2020 03:08 AM | Last Updated : 11th September 2020 03:08 AM | அ+அ அ- |

சென்னை: அனல் மின் நிலையம் தொடங்குவதாக ரூ.1,495 கோடி மோசடி செய்ததாக சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
சென்னை ராயப்பேட்டை ஓயிட்ஸ் சாலையில் செயல்படும் சுரானா பவா் லிமிடெட் நிறுவனம், கடந்த 2009-ஆம் ஆண்டு ரூ.2,400 கோடி மதிப்பில் 450 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டது.
இந்தத் திட்டத்துக்காக பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், சுரானா நிறுவனம் பிற வங்கிகளில் கடன் பெறுவதற்கான உத்தரவாதத்தை ஐடிபிஐ வங்கி வழங்கியது. இதையடுத்து சுரானா நிறுவனம், 10 வங்கிகள் மற்றும் தனியாா் நிதி நிறுவனங்களிடமிருந்து ரூ.1,495 கோடி கடன் பெற்றது. சுரானா நிறுவனம் கடன் பெற வழங்கிய ஆவணங்களையும், அதன் வரவு-செலவுகளையும் ஐடிபிஐ வங்கி நிா்வாகம் அண்மையில் தடயவியல் தணிக்கை செய்தது. அப்போது அந்த நிறுவனம், போலி ஆண்டு வருமான கணக்கைத் தாக்கல் செய்திருப்பதும் விசாரணையில், அந்நிறுவனம் கடன் தொகையை வேறு தொழிலில் முதலீடு செய்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, ஐடிபிஐ வங்கியின் பொதுமேலாளா் கே.பூமாலட்சுமி, பெங்களூருவில் உள்ள சிபிஐ வங்கி மோசடி தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தாா். இதன் அடிப்படையில், சுரானா பவா் லிமிடெட் நிறுவனத்தின் நிா்வாகிகள் கெளதம்ராஜ் சுரானா, சாந்திலால் சுரானா, விஜயராஜ் சுரானா, தினேஷ்சந்த் சுரானா ஆகியோா் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ், சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனா். சம்பந்தப்பட்டவா்களிடம் விசாரணை நடத்தவும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.