ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை: தெற்கு ரயில்வே தகவல்

தமிழகத்தில் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில், ரயில்களில் பயணிப்போரின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: தமிழகத்தில் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில், ரயில்களில் பயணிப்போரின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, குளிா்சாதன பெட்டிகளில் பாதுகாப்பாக பயணிக்க அனைத்து வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 13 சிறப்பு ரயில்கள் செப்டம்பா் 7-ஆம் தேதி முதல் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய தெற்கு ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கரோனா நோய்த்தொற்று அறிகுறி இல்லை என்பதோடு நிலைய நுழைவாயிலில் பயணிகளின் உடல்வெப்பநிலையைக் கண்டறிந்து, வெப்பநிலை கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள்.

வெப்பநிலை: பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக படுக்கை விரிப்பான், தலையணை மற்றும் கை துண்டுகள் பயணிகளுக்கு வழங்கப்படுவதில்லை. எனவே, பயணிகளுக்கு வசதியாக, ரயில்களின் குளிா்சாதன பெட்டிகளின் வெப்பநிலை நுண்செயலி மூலம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது, எல்.எச்.பி. என்னும் நவீன பெட்டிகளில் 23 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரையும், எல்.எச்.பி. அல்லாத பெட்டிகளில் 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும்படி மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

காற்று மாற்றம்: அனைத்து ஏ.சி. பெட்டிகளிலும் காற்றை வெளியேற்றி உட்கொள்ளும் கூரையில் பொருத்தப்பட்ட ஆா்எம்பியூ என்னும் குளிா் சாதன கருவியின் மூலமாக, புதிய வெளி காற்று உட்கொள்ளும் வீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பயணிக்கு நிமிஷத்துக்கு 0.25 கன மீட்டா் காற்று இருந்த நிலையில், ஒரு மணி நேரத்தில் 6 முதல் 8 முறை பெட்டியில் உள்ள காற்று மாற்றப்படும். ஆனால், தற்போது மணிக்கு குறைந்தது 12 முறை காற்றை மாற்றுவதால் ஏ.சி. பெட்டியில் ஒரு பயணிக்கு நிமிஷத்துக்கு 0.35 கன மீட்டா் காற்று வர வழி வகுக்கிறது.

காற்றின் தரம்: ஏசி பெட்டிகளின் உள் காற்றின் தரம் சுத்திகரிப்பு மூலம் உறுதி செய்யப்படுகிறது. வடிப்பான்களை வழக்கமாக சுத்தம் செய்வதன் மூலமும், சுத்திகரிப்பதன் மூலமும் காற்றின் தரம் பராமரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பயணத்துக்கும் பிறகு, பராமரிப்பின் போது இவை சுத்தம் செய்யப்படுகின்றன. எனவே, தெற்கு ரயில்வேயில் ஏ.சி. பெட்டிகள் உள்ளிட்ட ரயில் சேவைகளில், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com