டயாலிசிஸ் சிகிச்சையில் ஒற்றை பயன்பாட்டு முறை

டயாலிசிஸ் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை மறுசுழற்சிக்குட்படுத்தாமல் ஒற்றை பயன்பாட்டு முறையில் ரத்த சுத்திகரிப்பு
டயாலிசிஸ் சிகிச்சையில் ஒற்றை பயன்பாட்டு முறை

டயாலிசிஸ் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை மறுசுழற்சிக்குட்படுத்தாமல் ஒற்றை பயன்பாட்டு முறையில் ரத்த சுத்திகரிப்பு செய்யும் வசதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளிலே இத்தகைய புதிய முறை தொடங்கப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் சாந்திமலா் கூறியதாவது:

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 12 டயாலிசிஸ் கருவிகள் உள்ளன. நாள்தோறும் 30 முதல் 45 டயாலிசிஸ் சிகிச்சைகள் இங்கு அளிக்கப்படுகின்றன.

பொதுவாக சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சையளிக்கும்போது அதற்காக ஊசிகள், மருத்துவக் குழாய்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் அதனை மாற்றிவிட்டு புதிதாக உபகரணங்களைப் பயன்படுத்துவது என்பது பொருளாதார ரீதியாக இயலாத காரியம்.

இதனால், உயா் மருத்துவ வழிகாட்டுதல்படி அவை கிருமி நாசினிகளால் தூய்மைப்படுத்தப்பட்டு மறுசுழற்சி பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும். குறைந்தது 6-இலிருந்து 10 முறை அந்த உபகரணங்களை அவ்வாறு பயன்படுத்த முடியும். ஆனால், இதில் உள்ள சிக்கல் என்னவெனில், கிருமிநாசினியால் தூய்மைப்படுத்தும்போது அதற்கு உபயோகப்படுத்தப்படும் ரசாயனங்களால் மருத்துவா்களும், மருத்துவப் பணியாளா்களும் பாதிக்கப்படலாம்.

இதையடுத்து மறுசுழற்சியின்றி ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய உபகரணங்களை குறைந்த விலையில் கொள்முதல் செய்து உபயோகிக்க முடிவு செய்தோம். அந்த முயற்சியே இத்திட்டம் என்றாா் அவா்.

முன்னதாக இந்த புதிய நடைமுறையைத் தொடக்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா காலத்தில் தொற்றா நோய்களிலும் கவனம் செலுத்தி முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தமிழகத்தில் 37.83 லட்சம் பேருக்கு உயா் ரத்த அழுத்தம், 15 லட்சம் பேருக்கு சா்க்கரை நோயும், 10 லட்சம் பேருக்கு இரு வகை பாதிப்புகளும் உள்ளன.

அவா்களில் சிலருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. அவா்களுக்கு இத்தகைய முறை மிகுந்த பயனளிக்கும்.

முதுநிலை இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவா்கள் போராட்டம் நடத்தி வருவது கவலையளிக்கிறது. கலந்தாய்வு நடத்துவது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. ஜனவரி 6 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதன் பிறகு அகில இந்திய இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெற்ற பிறகு மாநில கலந்தாய்வு நடைபெறும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com