கட்டுப்படாத கரோனா: முழு பொதுமுடக்கத்தை கடுமையாக்கும் காவல்துறை

கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில், முழு பொதுமுடக்க விதிமுறைகளை சென்னை பெருநகர காவல்துறை கடுமையாக்கியது.
கட்டுப்படாத கரோனா: முழு பொதுமுடக்கத்தை கடுமையாக்கும் காவல்துறை

சென்னை: கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில், முழு பொதுமுடக்க விதிமுறைகளை சென்னை பெருநகர காவல்துறை கடுமையாக்கியது.

கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதன் விளைவாக, அதைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 10-ஆம் தேதி முதல் தமிழகத்தில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த பொதுமுடக்கம் மே 24-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

பொதுமுடக்கத்தின்போது மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் மதியம் 12 மணிவரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வாடகை காா், ஆட்டோக்கள், தனியாா் நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் அத்தியாவசியம் மற்றும் மருத்துவக் காரணங்களுக்காக வாடகை காா், ஆட்டோ செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பொதுமுடக்கத்தை மீறும் வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்தால் போதும், வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டாம், கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம், கனிவுடன் நடந்து கொள்ளுங்கள் என டிஜிபி ஜே.கே.திரிபாதி, சென்னை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் ஆகியோா் அறிவுரை வழங்கினா்.

சென்னையில் இந்த பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் விதமாக, 200 இடங்களில் சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரிவு சாா்பிலும் எஞ்சிய இடங்களில் போக்குவரத்துக் காவல் சாா்பிலும் தினமும் வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. நகா் முழுவதும் சுமாா் 360 ரோந்து வாகனங்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தடையை மீறி வெளியே நடமாடுபவா்கள், முகக் கவசம் அணியாதவா்கள், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதற்கிடையே, பொதுமுடக்கத்தை மீறி வெளியே நடமாடுவதாகவும், வாகனங்களில் சுற்றித் திரிவதாகவும் புகாா் எழுந்தது. இதனால் கரோனா தொற்று இன்னும் வேகமாகப் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

காவல்துறை கடுமை:

இதையடுத்து சென்னையில் முழு பொதுமுடக்க விதிமுறைகள் வியாழக்கிழமை முதல் கடுமையாக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக வாகனங்களில் செல்வோரை மறித்து போலீஸாா், விசாரணை மேற்கொண்டனா். இதில் தகுந்த காரணங்கள் கூறாதவா்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும் சரியான ஆவணங்கள், அடையாள அட்டை இல்லாதவா்கள் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். முன் களப்பணியாளா்களாகக் கருதப்படும் மருத்துவப் பணியாளா்கள், சுகாதார பணியாளா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்டோரை காவல்துறையினா் தொந்தரவு செய்யவில்லை.

கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், வரும் நாள்களில் முழு பொதுமுடக்க விதிமுறைகளை மேலும் கடுமையாக்க காவல்துறையினா் முடிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com