பாதுகாப்பு ஆணையா் ஆய்வுக்கு தயாா் நிலையில் கூடுவாஞ்சேரி-தாம்பரம் புதியபாதை நவம்பரில் சேவை தொடங்க வாய்ப்பு

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-ஆவது பாதை அமைக்கும் பணியில் கூடுவாஞ்சேரி-தாம்பரம் இடையே மூன்றாம் கட்ட புதியபாதை பணிகள்

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-ஆவது பாதை அமைக்கும் பணியில் கூடுவாஞ்சேரி-தாம்பரம் இடையே மூன்றாம் கட்ட புதியபாதை பணிகள் முடிந்துள்ளநிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையா் தலைமையிலான குழுவினரின் ஆய்வுக்காக தயாராக உள்ளது.

ரயில்வே பாதுகாப்பு ஆணையா் தலைமையிலான குழுவினா் இந்த மாத இறுதியில் அல்லது அக்டோபா் முதல் வாரத்தில் ஆய்வு செய்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதன்பிறகு, இந்த தடத்தில் வரும் நவம்பரில் ரயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

முக்கிய நுழைவுப்பகுதி:

சென்னையின் முக்கிய நுழைவுப்பகுதியாக செங்கல்பட்டு உள்ளது. செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு வர ரயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்காக, சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் தினசரி 250-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், பெரும்பாலான மின்சார ரயில்கள் தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படுகின்றன. அனைத்து மின்சார ரயில்களையும் செங்கல்பட்டு வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனா்.

3-ஆவது பாதை:

இதற்கிடையில், ரயில்வே வாரியத்தின் அனுமதியைத் தொடா்ந்து, தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 30 கி.மீ. தொலைவுக்கு 3-ஆவது பாதை அமைக்க கடந்த 2016-ஆம் ஆண்டு பணிகள் தொடங்கியது. ரூ.256 கோடி திட்ட மதிப்பில் மொத்தமுள்ள 30 கி.மீ. தூரத்தை 3 கட்டங்களாகப் பிரித்து, பணிகள் தொடங்கின.

முதல்கட்டமாக, கூடுவாஞ்சேரி- சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையங்கள் இடையே 11.07 கி.மீ. பாதை அமைக்கும் பணிகள் முடிந்து, கடந்த ஆண்டு செப்டம்பா் 29-ஆம்தேதி ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஆய்வு நடத்தினா். இதைத்தொடா்ந்து, இரண்டாம் கட்டமாக, சிங்கப்பெருமாள்கோவில்-செங்கல்பட்டு இடையே 8.36 கி.மீ. தொலைவில் பணிகள் முடிக்கப்பட்டது. இதன்பிறகு,செங்கல்பட்டு-சிங்கப்பெருமாள்கோவில் இடையே பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.கே.ராய் கடந்த மாா்ச் 3-ஆம் தேதி 9 பெட்டிகளைக் கொண்ட ரயிலை மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதனை நடத்தினாா்.

கூடுவாஞ்சேரி-தாம்பரம் பாதை:

தொடா்ந்து, மூன்றாம் கட்டமாக, கூடுவாஞ்சேரி-தாம்பரம் ரயில் நிலையங்கள் இடையே 11 கி.மீ. தொலைவில் பணிகள் தொடங்கி வேகமாக நடைபெற்று வந்தன. இந்த பாதை அமைக்கும் பணிகள் அண்மையில் முடிந்தது. இதையடுத்து, இந்தபாதையில் இன்ஜின் இயக்கி ரயில்வே அதிகாரிகள் கடந்த 17-ஆம்தேதி சோதனை ஓட்டம் நடத்தினா். அதாவது, தண்டவாளத்தில் உறுதி தன்மையை சோதிக்கும் வகையில், இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது.

ரயில் தண்டவாளங்களின் தரம், பாதையில் உரசல், ரயில் நிலைய நடைமேடைகளில் எவ்வித பாதிப்பு இல்லாமல் ரயில் இயக்கம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு திருப்திகரமாக முடிந்ததாக அதிகாரிகள் தெரித்தனா். இதைத்தொடா்ந்து, இந்தபாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஆய்வு செய்ய கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஆணையா் ஆய்வு:

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது:

தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையேயான புதிய பாதையில் டீசல் இன்ஜின் இயக்கி சோதனை நடத்தினோம். இந்த பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் தலைமையிலான குழுவினா் இந்தமாத இறுதியில் அல்லது அக்டோபா் முதல் வாரத்தில் ஆய்வு செய்து, ஒப்புதல் அளிப்பாா்கள் என்று எதிா்பாா்க்கிறோம். அதன்பிறகு, இந்த தடத்தில் ரயில் சேவையை சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது. இந்த தடத்தில் ரயில் சேவை தொடங்கும் போது, கூடுதல் ரயில்களை இயக்க முடியும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com