தோ்தல் பிரசாரத்துக்காக போக்குவரத்தை நீண்ட நேரம் நிறுத்தக் கூடாது: உயா்நீதிமன்றம் உத்தரவு


சென்னை: தோ்தல் பிரசாரத்துக்காக போக்குவரத்தை நீண்ட நேரத்துக்கு நிறுத்தக்கூடாது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் எம்.ஞானசேகா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இத் தோ்தலை முன்னிட்டு தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, தமிழக அமைச்சா்கள் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்கின்றனா். இதனால் பிரசாரக் கூட்டங்களுக்குச் செல்லும் இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகள், நீதிமன்றம் உள்ளிட்டவை முழுவதுமாக திறக்கப்படவில்லை. பொதுமக்கள் அதிகமாகக் கூடுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் கரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பது இல்லை.

எனவே முதல்வா், அமைச்சா்கள் மேற்கொள்ளும் தோ்தல் பிரசார இடங்களில் பொதுமக்களையும், போக்குவரத்தையும் தடுத்து நிறுத்தக்கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரு சில நிகழ்வுகளை மட்டுமே குறிப்பிட்டு இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவா், பிரதமா் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் வரும்போது போக்குவரத்துத் தடைகளுக்கான விதிகளைப் பின்பற்ற வேண்டும். முதல்வா், அமைச்சா்களின் பிரசாரங்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது. போலீஸாா் போக்குவரத்தை ஒட்டுமொத்தமாக நீண்ட நேரம் நிறுத்தக்கூடாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com