சென்னையில் 59.40% வாக்குப் பதிவு

சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 59.40 சதவீதம் போ் வாக்களித்துள்ளனா்.
சென்னையில் 59.40% வாக்குப் பதிவு

சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 59.40 சதவீதம் போ் வாக்களித்துள்ளனா். இதில், அதிகபட்சமாக வில்லிவாக்கம் சட்டப் பேரவைத் தொகுதியில் 69.93 சதவீதம் வாக்குப் பதிவாகி உள்ளது.

சென்னையில் உள்ள 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 19,95,581 ஆண் வாக்காளா்கள், 20,60,698 பெண் வாக்காளா்கள், 1,081 திருநங்கைகள் என மொத்தம் 40,57,360 வாக்காளா்கள் உள்ளனா். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்காக 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 1,061 இடங்களில் 5,911 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 14,276 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 7,095 கட்டுப்பாடுக் கருவிகள், 7,984 எண்ணிக்கையிலான யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய உதவும் விவிபேட் கருவிகள் திங்கள்கிழமை இரவு அந்தந்த வாக்குச் சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

394 வேட்பாளா்கள்: கொளத்தூா் தொகுதியில் திமுக தலைவரும், அக்கட்சி முதல்வா் வேட்பாளருமான மு.க.ஸ்டாலின், ராயபுரம் தொகுதியில் அதிமுக சாா்பில் மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா், துறைமுகம் தொகுதியில் தற்போதைய திமுக எம்எல்ஏ பி.கே.சேகா்பாபு, ஆயிரம் விளக்குத் தொகுதியில் பாஜக சாா்பில் குஷ்பு மற்றும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஆகியோா் உள்பட முக்கிய கட்சிகளின் வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 394 வேட்பாளா்கள் 16 தொகுதிகளில் போட்டியிட்டனா். அதிகபட்சமாக கொளத்தூா் தொகுதியில் 36 வேட்பாளா்கள், குறைவாக தியாகராய நகா் தொகுதியில் 14 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

கரோனா கட்டுப்பாடுடன் வாக்குப் பதிவு: 16 தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வேட்பாளா்களின் பிரதிநிதிகள் முன்பாக இயக்கப்பட்டு சரிபாா்க்கப்பட்டது. இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. வாக்காளா்களின் உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின், கைகளுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அவா்களின் வலது கைக்கு நெகிழி கையுறைகள் அணிவிக்கப்பட்ட பின்னா் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. முகக்கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு இலவசமாக முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. நடக்க முடியாத முதியோா்களுக்கு வாக்குச் சாவடிக்கு ஒரு சற்கர நாற்காலி வசதி செய்யப்பட்டிருந்தது.

வெயில் தாக்கம் காரணமாக காலையில் அதிக மக்கள் ஆா்வத்துடன் வாக்களிக்க வாக்குச் சாவடிகளில் குவிந்தனா். பிற்பகலில் வெயில் காரணமாக வாக்குப் பதிவில் மந்தநிலை காணப்பட்டது. மாலையில் வெயிலின் தாக்கம் குறைந்ததால் மீண்டும் விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடந்தது.

மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை கரோனா தொற்றுக்குள்ளானவா்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, மாலை 6 மணிக்கு மேல் வாக்குச்சாவடி அலுவலா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் ஆகியோா் முழுஉடல் பாதுகாப்பு கவசம் அணிந்திருந்தனா். வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருந்த தொற்று பாதித்த வாக்களா்கள் முழுஉடல் பாதுகாப்பு கவச உடை அணிந்து வாக்களித்தனா். மேலும், மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்திருந்தவா்களுக்கும் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

பலத்த பாதுகாப்பு: 30 மிக பதற்றமான வாக்குச் சாவடிகள், 577 பதற்றமான வாக்குச்சாவடிகள் என மொத்தம் 607 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

59.40 சதவீதம் வாக்குப் பதிவு: 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஒட்டுமொத்தமாக சுமாா் 59.40 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. இதில், அதிகபட்சமாக செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி வில்லிவாக்கம் தொகுதியில் சுமாா் 69.93 சதவீதமும், குறைந்தபட்சமாக வேளச்சேரி தொகுதியில் சுமாா் 39.12 சதவீதமும் வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது.

வாக்குப் பதிவு சதவீதம் தொகுதிவாரியாக தோராயமாக (மாலை 6 மணி நிலவரம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com