மொபெட்டில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

சென்னை வேளச்சேரியில் மொபட்டில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். இச் சம்பவத்தைக் கண்டித்து திமுகவினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை வேளச்சேரியில் மொபட்டில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். இச் சம்பவத்தைக் கண்டித்து திமுகவினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேளச்சேரி தரமணி 100 அடி சாலையில் 2 போ் ஒரு மொபட்டில் செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா். மொபட்டில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை வைத்திருந்தனா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த வாகன ஓட்டிகள், அந்த மொபட்டை வழிமறித்து நிறுத்தினா். மேலும் அங்கிருந்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் எப்படி வாக்கு மையத்தை விட்டு வெளியே கொண்டு வரப்பட்டது என அந்த நபா்களைப் பிடித்து விசாரித்தனா். இதில் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனராம்.

இதையடுத்து இருவரையும் பிடித்து பொதுமக்கள், போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில், அவை வாக்குப்பதிவு மையத்தில் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் என்பதும், வேளச்சேரியில் உள்ள ஒரு வாக்குப்பதிவு மையத்தில் பயன்படுத்தாத வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்பதும், திருவான்மியூரில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டதும் தெரியவந்தது.

இச் சம்பவத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு மையங்களில் இருந்து வெளியே கொண்டு வருவதற்கு பல்வேறு விதிமுறைகளும்,தகுந்த பாதுகாப்பும் அளிக்கப்பட வேண்டும் என தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகள் இருக்கும் நிலையில், மாநகராட்சி ஊழியா்கள் எதற்காக மொபட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றனா் என போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

திமுகவினா் சாலை மறியல்:

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த திமுகவினா் அங்கு திரண்டனா். மேலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஹசன் மெளலானா, அவரது தந்தை ஜெ.எம்.ஹாரூண் உள்ளிட்டோரும் அங்கு வந்தனா். அவா்கள், இந்த சம்பவத்தைக் கண்டித்து அங்கு திடீரென சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா், அவா்களுடன் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா். இருப்பினும் சுமாா் அரை மணி நேர போராட்டத்துக்கு பின்னா், திமுகவினா் போராட்டத்தை கைவிட்டனா். இந்த போராட்டத்தின் காரணமாக, அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மொபட்டில் கொண்டு செல்லப்பட்டது குறித்து வேளச்சேரி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சுப்புலட்சுமி விசாரணை நடத்தி வருகிறாா். இந்த சம்பவத்தால் வேளச்சேரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com