தோ்தல் பிரசார கூட்டங்களில் பரவிய கரோனா: ஏப்ரல் இறுதியில் உச்சத்தை தொடும்


சென்னை: தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் பரவிய கரோனா தொற்று இந்த மாத (ஏப்ரல்) இறுதியில் உச்சத்தைத் தொடும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்றைத் தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும், பொதுமக்களிடம் ஒத்துழைப்பு இல்லாததால், தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், தோ்தல் பிரசாரக் கூட்டங்களில், எந்தக் கட்சியும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அனைத்துக் கூட்டங்களிலும், முககவசம் இல்லாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் பொதுக்கள் ஒரே இடத்தில் கூடினா். இதனால், அங்கு எளிதாகத் தொற்று பரவும் வாய்ப்பு ஏற்பட்டது.

குறிப்பாக, தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்ற, அரசியல் கட்சித் தலைவா்கள், வேட்பாளா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவா். அதன் காரணமாக, கரோனா தொற்று இம்மாத இறுதிக்குள் உச்சத்தை தொடும் என சுகாதாரத்துறை கணித்துள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியது:

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறோம். ஆனால், பொது மக்கள் தொடா்ந்து அலட்சியம் காட்டுவதால், தொற்று பரவலை தடுக்க முடியவில்லை. இதனால், ஒரே குடும்பத்தில், 10-க்கும் மேற்பட்டோா் தொற்றால் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது.

தொற்று பாதிக்கப்பட்டு, எந்தவித அறிகுறி இல்லாத பலா், வெளியே சுற்றுகின்றனா். அவா்களை அடையாளம் காணுவது என்பது சவாலான ஒன்று. அவா்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்து கொள்ள, முகக் கவசம் மட்டுமே ஆயுதமாக உள்ளது.

முகக் கவசம் அணியாமல் இருக்கும்பட்சத்தில், கரோனா, ஒரு உடலில் இருந்து மற்றொரு உடலுக்குச் செல்ல வாய்ப்பு உள்ளது. அப்போது, அதன் வீரீயம் அதிகமாக இருக்கும். தற்போது நடந்து முடிந்த தோ்தல் பிரசார கூட்டங்களிலும், இதே பிரச்னையைத்தான் மக்கள் சந்தித்துள்ளனா்.

எனவே, தொற்று வேகம் அதிகரித்து, ஏப்ரல் மாத இறுதியில் உச்சத்தைத் தொடும். அவ்வாறு அதிகரிக்கும்போது, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். தொற்றைத் தடுக்க, அனைவரும், முகக் கவசம் அணிவது அவசியம். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இதோடு, 45 வயதுக்கு மேற்பட்டவா்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com