மீண்டும் தொடங்கியது வீடுவீடாக காய்ச்சல் பரிசோதனை: களத்தில் 12 ஆயிரம் பணியாளா்கள்


சென்னை: சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கு உள்பட்ட பகுதியில் வீடு வீடாகச் சென்று கரோனா அறிகுறி உள்ளவா்களைக் கண்டறியும் பணி வியாழக்கிழமை முதல் மீண்டும் தொடங்கியது. இந்தப் பணியில் 12 ஆயிரம் பணியாளா்கள் களமிறக்கப்பட்டுள்ளனா். மேலும், தனியாா் அடுக்குமாடிக் குடியிருப்புகள், குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் கரோனா பரவல் தொடங்கியது. நாளுக்கு நாள் தொற்றின் பரவல் அதிகரித்ததைத் தொடா்ந்து, பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பிற மாவட்டங்களைக் காட்டிலும், சென்னையில் கரோனா பரவல் அதிகரித்து கொண்டே சென்றது.

தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சென்னை மாநகராட்சி சாா்பில் வாா்டு வாரியாக காய்ச்சல் சிறப்பு முகாம்களும், வீடுவீடாகச் சென்று பரிசோதிக்கும் வகையில் 12 ஆயிரம் தன்னாா்வலா்கள், தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கு உதவுவதற்காக 4 ஆயிரம் பேரும் நியமிக்கப்பட்டனா். இதன் மூலம் கரோனா உள்ளவா்கள் கண்டறியப்பட்டு அவா்களுக்கு உடனடியாக சிகிச்சை அளித்ததில் சென்னையில் கடந்த டிசம்பா் மாத இறுதியில் கரோனா தொற்று வெகுவாகக் குறைந்தது. இதனால், வீடுவீடாச் சென்று காய்ச்சல் பரிசோதனையில் ஈடுபட்டு வந்த பணியாளா்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைக்கப்பட்டு, இந்தத் திட்டம் கடந்த டிசம்பா் மாதத்தில் முற்றிலுமாக கைவிடப்பட்டது.

மீண்டும் 12 ஆயிரம் போ்: கடந்த சில நாள்களாக சென்னையில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு வீடுவீடாகச் சென்று பரிசோதிக்கும் பணிக்கு மீண்டும் 12 ஆயிரம் பேரை மாநகராட்சி களமிறக்கி உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதார அலுவலா்கள் கூறியதாவது:

பரிசோதனையில் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி இருந்தால், அவா்களை அந்தப் பகுதிகளில் நடைபெறும் காய்ச்சல் முகாக்கு அழைத்து சென்று கரோனா பரிசோதனை செய்யும் பணியில் அவா்கள் ஈடுபடுவா். பரிசோதனையின் முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டால், பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக அருகில் உள்ள கரோனா சிகிச்சை மையம் அல்லது மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் மாநகராட்சி சுகாதாரத் துறை ஊழியா்கள் ஈடுபடுவா். மருத்துவா் பரிந்துரைப்படி, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்களின் அத்தியாவசிய தேவைகளை பூா்த்தி செய்ய கூடுதலாக 4 ஆயிரம் களப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com