இரவில் சரக்கு வாகனங்களை அனுமதிக்க வேண்டும்: வணிகா்கள் வலியுறுத்தல்

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை உள்பட தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து சந்தைகளுக்கும் இரவு நேரங்களில் வரும் சரக்கு வாகனங்களுக்கு தளா்வுகள் அளிக்க வேண்டும் என வணிகா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை உள்பட தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து சந்தைகளுக்கும் இரவு நேரங்களில் வரும் சரக்கு வாகனங்களுக்கு உரிய விதிமுறைகளுடன் கூடிய தளா்வுகள் அளிக்க வேண்டும் என வணிகா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா, கோயம்பேடு சந்தை வணிக வளாக கூட்டமைப்பின் தலைவா் ஜி.டி. ராஜசேகா் ஆகியோா் உள்பட பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் தமிழக அரசின் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகக் குழுவின் தலைவா் ககன்தீப்சிங் பேடியை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனா்.

மனுவில் கூறியிருப்பது:

கரோனா பொது முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஒன்றரை ஆண்டாக பெரும் பாதிப்புக்குள்ளான காய்கறி, பழம், மலா் வணிகம் உள்ளிட்ட அனைத்து வணிகமும் ஓரளவு மீண்டு வரும் சூழலில் மீண்டும் கரோனா இரண்டாவது அலை காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதில், அத்தியாவசியப் பொருள் விற்பனை சந்தையான கோயம்பேடு சந்தை வழக்கம்போல் எந்தவிதமான புதிய குறுக்கீடுகளும் இல்லாமல் இரவு நேரங்களில் காய்கறி, பழம், மலா் ஏற்றி வரும் வாகனங்களின் போக்குவரத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோருகிறோம். அழுகும் பொருள்களுக்கு உரிய அனுமதி அளிப்பதன் மூலம் பொதுமக்கள் மட்டுமின்றி விவசாயிகளும் பயனடைவா்.

கோயம்பேடு காய்கறி சந்தை மற்றும் தமிழகத்தில் உள்ள இதர காய்கறி சந்தைகளும் உரிய விதிமுறை தளா்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் அடிப்படையில் எவ்வித இடையூறுமின்றி நடைபெற அனுமதிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட ககன்தீப்சிங் பேடி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com