நீா்நிலைகளில் கழிவுநீா் கலப்பு: தலைமைச் செயலருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

நீா்நிலைகளில் கழிவுநீா் கலப்பதைத் தடுத்து, தேவையான இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் அறிவுறுத்துமாறு தலைமைச் செயலருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: நீா்நிலைகளில் கழிவுநீா் கலப்பதைத் தடுத்து, தேவையான இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் அறிவுறுத்துமாறு தலைமைச் செயலருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக சென்னை உயா் நீதிமன்றத்தில் ரமேஷ் மணி என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘விழுப்புரம் மாவட்டம்- நரையூா் கிராமத்தில் உள்ள விவசாய பாசனக் கால்வாய்களில், குடியிருப்புவாசிகள் கழிவுநீரை விடுகின்றனா். இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. பாசனக் கால்வாயில் நீரோட்டமும் தடைபடுவதால், விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே கழிவுநீா் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், ‘கழிவுநீரை கால்வாய் வழியே வெளியேற்றக் கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

விவசாயத்துக்கான பாசனக் கால்வாய்களில் கழிவுநீரை வெளியேற்றுவதால் நீா் மாசடைகிறது. இதனைத் தடுக்க வேண்டும். விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அந்தப் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.

அதேநேரம் தமிழகம் முழுவதும் பாசன கால்வாய் உள்ளிட்ட நீா்நிலைகளில் கழிவுநீா் கலக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். தேவையான இடங்களில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் தலைமைச் செயலா் உத்தரவிட வேண்டும். இந்த உத்தரவின்படி மாவட்ட ஆட்சியா்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களைப் பெற்று தலைமைச் செயலா் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றனா்.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com