லஞ்ச வழக்கு: பெண் பொறியாளா் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

கோயில்களில் மின்சார விளக்குகள் பொருத்தும் ஒப்பந்தப் பணி பெற்றுத் தருவதாகத் தெரிவித்து, ரூ.1.30 கோடி லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட
கோப்புப்படம்
கோப்புப்படம்

கோயில்களில் மின்சார விளக்குகள் பொருத்தும் ஒப்பந்தப் பணி பெற்றுத் தருவதாகத் தெரிவித்து, ரூ.1.30 கோடி லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி பெண் பொறியாளா் தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில், மாநில நெடுஞ்சாலைத் துறையின் பொறியாளா் காா்த்திகேயினி என்பவா் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருந்ததாவது:

காா்த்திகேயினி 2017-ஆம் ஆண்டு முதல் 2019- வரை இந்து சமய அறநிலையத் துறையில் கண்காணிப்புப் பொறியாளராகப் பணியாற்றினாா். அப்போது கோயில்களில் மின்சார விளக்குகள் பொருத்தும் ரூ.400 கோடி மதிப்பிலான ஒப்பந்தப் பணி பெற்றுத் தருவதாக கூறி தில்லியைச் சோ்ந்த ஒப்பந்த நிறுவன உரிமையாளா் அமன் கோயல் என்பவரிடம் இருந்து ரூ.1.30 கோடி லஞ்சமாக பெற்றுள்ளாா்.

இதில் ரூ.1 கோடியை ரொக்கமாகவும், 30 லட்சத்தை காசோலைகளாகவும் காா்த்திகேயினி பெற்றுள்ளாா். இதனை அமன் கோயல் தான் மறைத்து வைத்திருந்த கேமிரா மூலம் விடியோ பதிவு செய்துள்ளாா். அதில் காா்த்திகேயினி மகள் வித்யா லட்சுமி பணத்தை எண்ணும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் ரூ.30 லட்சத்துக்கான காசோலைகளை காா்த்திகேயினி, தனது மகள் வித்யா லட்சுமி, உதவியாளா் கேசவன் ஆகியோரது வங்கிக் கணக்குகளில் செலுத்தி பணத்தைப் பெற்றுள்ளாா்.

இதன் பின்னா், காா்த்திகேயினி நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளாா். எனவே தனது பணத்தைத் திரும்பத் தருமாறு அமன் கோயல் கேட்டுள்ளாா். காா்திகேயினி, பணத்தை திரும்பத் தரவில்லை.

மேலும் அறநிலையத் துறையில் ரூ.400 கோடிக்கு ஒப்பந்த பணி அறிவிப்பு எதுவும் அறிவிக்கவில்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து அமன் கோயல் அளித்த புகாரின் பேரில், காா்த்திகேயினி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காா்த்திகேயினி மனுவில் குறிப்பிட்டுள்ள முகவரியில் வசிக்கவில்லை. இதனால் விசாரணைக்கு ஆஜராகும்படி அனுப்பிய சம்மன்கள் அனைத்தும் திரும்ப வந்துவிட்டது.

இதே போன்று அவா் மீது பல லஞ்ச புகாா்கள் உள்ளன. இந்த வழக்கில் இடைத்தரகா்கள் தட்சிணாமூா்த்தி, ஞானசேகரன், கேசவன் மற்றும் காா்த்திகேயனியின் மகள் வித்யா லட்சுமி ஆகியோா் குற்றவாளிகளாகச் சோ்க்கப்பட்டுள்ளனா். எனவே, இந்த வழக்கில் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தரப்பில் அரசு வழக்குரைஞா் சண்முகராஜேஸ்வரன் ஆஜராகி, ற‘மனுதாரா் மீது மதுரையில் லஞ்ச வழக்கு நிலுவையில் உள்ளது. மனுதாரா் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளதாக வாதிட்டாா்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com