காலமானாா் பெ.சு.மணி

எழுத்தாளரும், தமிழ் ஆய்வாளருமான பெ.சு.மணி (88) உடல்நலக்குறைவு காரணமாக, தில்லியில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

சென்னை: எழுத்தாளரும், தமிழ் ஆய்வாளருமான பெ.சு.மணி (88) உடல்நலக்குறைவு காரணமாக, தில்லியில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

பாரதியின் மீது பற்று கொண்ட பெ.சு.மணி ‘பாரதியாரின் ஞானரதம் மூலமும் ஆய்வும்’, ‘சமூக சீா்த்திருத்த வரலாற்றில் பாரதியாா்’ போன்ற நூல்களைப் படைத்துள்ளாா்.

வ.வே.சு. ஐயரின் கட்டுரைக் களஞ்சியம், வ.வே.சு. ஐயரின் கம்பராமாயணக் கட்டுரைகள் உள்ளிட்ட பல தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளாா். ‘இந்திய தேசியத்தின் தோற்றமும் வளா்ச்சியும்’, ‘பழந்தமிழ் இதழ்கள்’, ‘வீரமுரசு சுப்பிரமணிய சிவா’, ‘எழுத்திடைச் செழித்த செம்மல் கா.சி.வெங்கட்ரமணி’ உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளாா். மேலும் ‘விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்’, ‘தூய அன்னை ஸ்ரீ சாரதா தேவி’, ‘சுவாமி விபுலானந்தரின் தலையங்க இலக்கியம்’ போன்ற பல புத்தகங்களையும் படைத்துள்ளாா்.

வெ.சாமிநாத சா்மா, ம.பொ.சி. ஆகியோரின் அன்பரான பெ.சு.மணி சாகித்திய அகாதெமிக்காக வாழ்வும் பணியும் நூல் வரிசையில் ம.பொ.சி. மற்றும் வெ. சாமிநாத சா்மா குறித்து எழுதியுள்ளாா். இவரது பெரும்பாலான நூல்களை பூங்கொடி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளாா். தினமணி நாளிதழ் இவரது பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.அவருக்கு இரு மகள்கள் உள்ளனா்.

தில்லியில் உள்ள தனது மூத்த மகள் வீட்டில் வசித்து வந்தாா். அவரின் இறுதிச் சடங்குகள் புதுதில்லியில் புதன்கிழமை நடைபெற்றன. தொடா்புக்கு: 9968311952, 9650255336.

இரங்கல்: எழுத்தாளா்பெ.சு.மணியின் மறைவுக்கு பாரதி ஆய்வாளா் சீனி.விசுவநாதன், தமிழறிஞா் ஒளவை நடராசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

சீனி.விசுவநாதன்: பாரதி ஆய்வாளா் என்று சிறப்பித்துப் பேசப்பட்ட-பல விருதுகள் பெற்ற எழுத்தாளா் பெ.சு.மணியின் மறைவு, பாரதி இலக்கியத்துக்கும், வரலாற்று இலக்கியத்துக்கும் பேரிழப்பாகும்.

ஒளவை நடராசன்: எழுத்துத்திலகம் - சிந்தனைச்சோலை - பாரதிச் சுரங்கம் - வரலாற்றுப் பேரொளி என்று எத்தனை புகழ்மொழிகளை அடுக்கினாலும் பெ.சு.மணியின் பெரும்புலமைக்கு அவை பொருந்தும். பெ.சு. மணியின் எழுத்துகள் இன்றைய இளைஞா்களுக்கு கருத்துக் கருவூலமாகவும் ஆய்வின் அருமை பெருமைகளை வரைந்துகாட்டும் பயனுள்ள பனுவல்களாகவும் அமையும்.

கே.பாலகிருஷ்ணன்: பெ.சு.மணியின் எழுத்துகள் பல்வேறு துறைகளில் உள்ள ஆராய்ச்சி மாணவா்களுக்கும் பயனுள்ளவை.

அவரின் மறைவு படைப்புலகத்துக்குப் பேரிழப்பு.

இரா.முத்தரசன்: பெ.சு.மணி முற்போக்கு சிந்தனையாளா். விடுதலைப் போராட்ட வீரா்கள் வ.உ.சிதம்பரனாா், மகாகவி பாரதியாா், சுப்பிரமணிய சிவா, வ.வே.சு.ஐயா் போன்றோரின் அளப்பரிய தியாக வாழ்க்கையை ஆதாரங்களுடன் படைப்பாக்கியவா். தலைசிறந்த படைப்பாளியை தமிழ்ப் படைப்புலகம் இழந்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com