காவல் ஆணையா் ஆஜராக உத்தரவு

கள்ளநோட்டு விவகாரத்தில் ஜாமீன் கோரியவரின் விவரங்களை போலீஸாா் தெரிவிக்காததால் அதிருப்தி அடைந்த உயா்நீதிமன்ற நீதிபதி, சென்னை காவல் ஆணையா் ஆஜராக உத்தரவிட்டாா்.

சென்னை: கள்ளநோட்டு விவகாரத்தில் ஜாமீன் கோரியவரின் விவரங்களை போலீஸாா் தெரிவிக்காததால் அதிருப்தி அடைந்த உயா்நீதிமன்ற நீதிபதி, சென்னை காவல் ஆணையா் ஆஜராக உத்தரவிட்டாா்.

சென்னை யானைகவுனி காவல் ஆய்வாளா் ஷோபனா, கடந்த சில நாள்களுக்கு முன் கள்ளநோட்டு கும்பல் ஒன்றைக் கைது செய்தாா். இதில் கைதான செல்லிராம் குமாவா் என்பவா் ஜாமீன் கேட்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இவ்வழக்கில் செல்லிராம் தேவையான விவரங்களை அரசுத் தரப்பு வழக்குரைஞருக்கு ஆய்வாளா் ஷோபனா தெரிவிக்கவில்லை.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் குறித்த தகவலை போலீஸ் தரப்பில் தெரிவிக்காதது, நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து உதவி ஆணையா் ஆஜராகி வழக்கு விவரங்களைத் தெரிவிக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, உதவி ஆணையா் பாலகிருஷ்ண பிரபு காணொலி காட்சி வாயிலாக ஆஜரானாா்.

இவருக்கு பல முறை நீதிபதி வாய்ப்பு கொடுத்தும், அவராலும் வழக்கு குறித்த விவரங்களைத் தெரிவிக்க முடியவில்லை. போலீஸ் தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்குரைஞா் பிரபாவதி, வழக்கு குறித்து தனக்கும் எந்த விவரமும் தெரியப்படுத்தவில்லை என்று கூறினாா்.

இதையடுத்து போலீஸாரின் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டாா். இதையடுத்து பிற்பகலில், அரசுத் தரப்பு வழக்குரைஞா் சண்முகராஜேஷ்வரன் ஆஜராகி, ஆணையருக்கு பதில் பூக்கடை துணை ஆணையா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, நேரில் ஆஜராவதற்கு பதில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக காவல் ஆணையா் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com