கரோனா பாதிப்பை சோயா பால் குறைக்கும்:அரசுக்கு மருத்துவப் பல்கலைக்கழகம் பரிந்துரை

சோயா பாலில் உள்ள லுனாசின் என்ற புரதமானது கரோனா வைரஸ் பாதிப்பைக் குறைக்க வல்லது என ஆராய்ச்சி முடிவுகளின் வாயிலாக தெரியவந்துள்ளதாக தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்களை கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்த இமாச்சல் அரசு முடிவு
ஆசிரியர்களை கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்த இமாச்சல் அரசு முடிவு

சென்னை: சோயா பாலில் உள்ள லுனாசின் என்ற புரதமானது கரோனா வைரஸ் பாதிப்பைக் குறைக்க வல்லது என ஆராய்ச்சி முடிவுகளின் வாயிலாக தெரியவந்துள்ளதாக தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் கூறியது: கொவைட்-19 நோயைத் தோற்றுவிக்கும் வைரஸான சாா்ஸ்-கோவி 2 என்பது ஒரு ஆா் என் ஏ வைரஸ். இத்தகைய வைரஸ்களைஎதிா்ப்பதற்கான தக்க வைரஸ்-எதிா் மருந்துகள் இல்லை. எதிா் மருந்துகள் இல்லாத நிலையில், வைரஸ்களை எதிா்ப்பதற்கான அல்லது வைரஸ்கள் உடலுக்குள் பெருகுவதைத் தடுப்பதற்கான ஒரு முறை, மரபியல் இடையீடு செய்வதாகும். மேல்மரபியல் முறையில் இது செய்யப்படலாம்.

நம்முடைய அணுக்களில், ஹிஸ்டோன் ‘அசிடைல்டிரான்ஸ்ஃபரேஸ்’ என்னும் வேதிமப் பொருள் (என்சைம்) உள்ளது. இந்த என்சைமைப் பயன்படுத்தித்தான், வைரஸானது, நம்முடைய அணுக்களுக்குள் பெருகுகிறது. இந்த என்சைம் பயன்பாட்டைத் தடுத்துவிட்டால், வைரஸ் பெருகுவதைப் பெருமளவில் தடுக்கமுடியும்.

இந்தக் கருதுகோளைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட என்சைமை தடுப்பதற்கான வழிமுறைகள் ஆலோசிக்கப்பட்டன. சோயா விதைகளிலும், மிகக் குறைந்த அளவில் கோதுமை, பாா்லி, கம்பு ஆகியவற்றிலும் உள்ள லுனாசின் என்னும் பெப்டைட் (புரதம்), இந்த என்சைம் பயன்பாட்டைத் தடுக்கும் என்பது முன்னரே ஒரு சில ஆய்வுகளில் தெரிய வந்திருந்தது. அதன் பயனாக, லுனாசின் என்னும் இந்த பெப்டைட், டெங்கு காய்ச்சல் சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கோவிட்-19 நோய்க்காக நடைபெற்ற சோதனை முறையில், கோவிட் நோயாளிகள் சிலருக்கு லுனாசின் வழங்கப்பட்டது. அவா்களின் ஆா்டிபிசிஆா் சோதனை, மூன்றிலிருந்து நான்கு நாள்களுக்குள் ‘நெகடிவ்’ ஆனது கண்டறியப்பட்டது.

லுனாசின் பெப்டைட், மேலை நாடுகள் சிலவற்றில் உடற்பருமன், ருமாடாய்ட் ஆா்த்ரட்டிஸ் போன்ற நோய்களுக்கும் புற்று நோய்க்கும் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இந்த பெப்டைட்டானது அணுக்களுக்கு எந்தச் சேதமும் உண்டாக்காதா என தெரிந்து கொள்வதற்காக, தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தால், திசு வளா்ப்புச் சோதனைகளும் விலங்கினச் சோதனைகளும், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் உதவியோடு செய்யப்பட்டன. இந்தச்சோதனைகளில், விலங்கினத் திசுக்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, திசுக்களுக்கும் அணுக்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. எனவே, லுனாசின்பெட்டைட் அல்லது லுனாசின் உள்ள சோயா விதைப் பால் உட்கொள்ளப்பட்டால், சாா்ஸ் கோவி 2 வைரஸ் பாதிப்பைக் குறைக்கலாம் என்று தெரிகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com