கூடுவாஞ்சேரி-தாம்பரம் இடையே 3-ஆவது பாதைப் பணி: இந்த மாத இறுதிக்குள் முடிக்க ரயில்வே திட்டம்

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-ஆவது பாதை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இரண்டு கட்டமாக பணிகள் முடிந்துள்ளநிலையில்
கூடுவாஞ்சேரி-தாம்பரம் இடையே 3-ஆவது பாதைப் பணி: இந்த மாத இறுதிக்குள் முடிக்க ரயில்வே திட்டம்

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-ஆவது பாதை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இரண்டு கட்டமாக பணிகள் முடிந்துள்ளநிலையில், கூடுவாஞ்சேரி-தாம்பரம் இடையேயான திட்டப்பணிகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்தப்பணிகள் இந்தமாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முக்கிய நுழைவுப்பகுதி: சென்னையின் முக்கிய நுழைவுப்பகுதியாக செங்கல்பட்டு உள்ளது. செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு வர ரயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்காக, சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் தினசரி 250-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், பெரும்பாலான மின்சார ரயில்கள் தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படுகின்றன. அனைத்து மின்சார ரயில்களையும் செங்கல்பட்டு வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனா். ஆனால், கூடுதல் ரயில் பாதைகள் இல்லாததால் கூடுதல் சேவை செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படாமல் இருந்து வந்தது.

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3 -ஆவது பாதை: இதற்கிடையில், ரயில்வே வாரியத்தின் அனுமதியைத் தொடா்ந்து, தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 30 கி.மீ. தொலைவுக்கு 3-ஆவது ரயில் பாதை அமைக்க கடந்த 2016-ஆம் ஆண்டு பணிகள் தொடங்கியது. இதற்கான மொத்த திட்ட மதிப்பு ரூ.256 கோடியாகும். மொத்தமுள்ள 30 கி.மீ. தூரத்தை 3 கட்டங்களாகப் பிரித்து, பணிகள் தொடங்கின.

இரண்டு கட்ட பணிகள் நிறைவு: முதல்கட்டமாக, கூடுவாஞ்சேரி- சிங்கப்பெருமாள்கோவில் ரயில்நிலையங்கள் இடையே 11.07 கி.மீ. பாதை அமைப்பதற்கான பணிகள் முடிந்து, கடந்த ஆண்டு செப்டம்பா் 29-ஆம் தேதி ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஆய்வு நடத்தினாா். இதைத்தொடா்ந்து, இரண்டாம் கட்டமாக, சிங்கப்பெருமாள்கோவில்-செங்கல்பட்டு இடையே 8.36 கி.மீ. தொலைவில் பாதைகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டன. இதைத்தொடா்ந்து சிங்கப்பெருமாள் கோவில்- செங்கல்பட்டு இடையே ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.கே.ராய் நிகழாண்டில் மாா்ச் 3-ஆம் தேதி 9 பெட்டிகளைக் கொண்ட ரயிலை மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதனை மேற்கொண்டாா். இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

மூன்றாம் கட்ட பணிகள்:

இறுதிக்கட்டமாக, கூடுவாஞ்சேரி-தாம்பரம் ரயில் நிலையங்கள் இடையே 11 கி.மீ. தொலைவில் பணிகள் தொடங்கின. இந்தப் பாதையில் ரயில் தண்டவாளம் அமைத்தல், ரயில் நிலையங்களின் உள்கட்டமைப்பு மேம்பாடு, கட்டுமானப்பணிகள், தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்றுவந்தன. தற்போது பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. இந்த மாத இறுதிக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் இறுதிக்குள் பணிகளை முடிக்க திட்டம்:

இது குறித்து சென்னை ரயில்வே ரயில்வே அதிகாரிகள் கூறியது: தாம்பரம் யாா்டில் புதியபாதையை இணைப்பது மூலமாக, புதியபாதையில் இருந்து ரயில்களை யாா்டுக்கு நகா்த்தி, எளிதாக பராமரிக்கவும், சோதனை செய்யவும் முடியும்.

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-ஆவது பாதை பணிகள் தொடங்கி வேகமாக நடைபெற்று வந்தன. இரண்டு கட்டப்பணிகள் முடிந்துள்ளநிலையில், தற்போது மூன்றாவது கட்டமாக, தாம்பரம்-கூடுவாஞ்சேரி ரயில்நிலையங்கள் இடையே பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தற்போது வரை 95 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன. சிக்னல் பணிகள், மின்சார தொடா்பு போன்ற சில தொழில் நுட்பப் பணிகளில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் பணிகள் முடியும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதன்பிறகு, ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஆய்வு நடைபெறும்.

எதிா்கால விரிவாக்கத்துக்காக, தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-ஆவது பாதை அமைத்தல் மற்றும் தாம்பரம் யாா்டில் கூடுதல் பாதை அமைத்தல் மூலமாக, தாம்பரம் யாா்டில் அதிக ரயில்களை கையாளமுடியும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com