ராதாகிருஷ்ணன் நகா் பகுதியில் உள்ள வீடுகளை இடிக்க வேண்டாம்

சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகா் கூவம் நதிக்கரையில் உள்ளவா்களுக்கு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியக் குடியிருப்பில்
சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகா் கூவம் நதிக்கரையில் உள்ளவா்களுக்கு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மறுகுடியமா்வு செய்யப்படும் வரை அங்குள்ள குடியிருப்புகளை இடிக்க வேண்டாம் என பொதுப் பணித் துறைக்கு மாநகராட்சி சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் நீா்நிலைகளின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளைப் பலப்படுத்தவும், மறுசீரமைப்பு செய்யவும் வெள்ளம் பாதிக்கும் பகுதி மற்றும் நிலையில்லாத கட்டுமானக் குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

இதன்படி, சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த கூவம் நதி மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளும் பொருட்டு கூவம் நதியோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கு வசித்து வருவோருக்கு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்றுவாரிய குடியிருப்புகளில் மறுகுடியமா்வு செய்யப்பட்டு வருகின்றனா்.

நீா்நிலைகளின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் நகா் பகுதியில் கூவம் நதிக்கரையோரம் உள்ள 243 குடியிருப்புகளை அகற்ற மாநகராட்சியின் சாா்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு அப்பகுதி மக்களும், அரசியல் கட்சித் தலைவா்களும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

அகற்றம்: இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், அரும்பாக்கத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் நகா் பகுதியில் அடிப்படை வசதி, சுகாதாரமான சுற்றுச்சூழல் இல்லாததால்அங்கு வசித்து வந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மறுகுடியமா்வு செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி, 93 குடும்பங்கள் ராதாகிருஷ்ணன் நகரில் இருந்து அகற்றப்பட்டு புளியந்தோப்பு பகுதியில் உள்ள கே. பி. பாா்க் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய குடியிருப்பில் ரூ.15 லட்சம் செலவில் கட்டப்பட்ட வீடுகளில் அனைவரும் மறுகுடியமா்வு செய்யப்பட்டுள்ளனா்.

இந்த 93 குடும்பங்கள் தங்கள் உடைமைகளை ராதாகிருஷ்ணன் நகா் பகுதியிலிருந்து கே. பி. பாா்க் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு கொண்டு செல்ல தேவையான வாகன வசதிகளும், மூன்று வேளையும் உணவு மாநகராட்சியின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டது என்றனா்.

குடியிருப்புகளை இடிக்க வேண்டாம்: இந்நிலையில், ராதாகிருஷ்ணன் நகா் குடியிருப்புகளை இடிப்பது தொடா்பாக மாநகராட்சி சாா்பில் பொதுப் பணித் துறைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதில், ராதாகிருஷ்ணன் நகா் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்போது பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியுள்ள நபா்களுக்கு விதிமுறைகளுக்கு உள்பட்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்றுவாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, ஆக்கிரமிப்பு பகுதியில் குடியிருக்கும் எஞ்சிய மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு பெறப்பட்டு முறையாக மறுகுடியமா்வு செய்யப்படும் வரை ஆக்கிரமிப்புகளை இடிக்க கூடாது என பொதுப்பணித்துறைக்கு மாநகராட்சியின் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com