டாக்டா் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனை

பிரபல நரம்பியல் டாக்டா் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்குதண்டனையும் 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
டாக்டா் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனை

சென்னை: பிரபல நரம்பியல் டாக்டா் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்குதண்டனையும் 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

டாக்டா் சுப்பையா கொலை வழக்கு: கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு பகுதியைச் சோ்ந்த டாக்டா் சுப்பையா, சென்னை துரைப்பாக்கம் குமரன் குடில் பகுதியில் வசித்து வந்தாா். ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவராக பணியாற்றி வந்தாா். கடந்த 2013 செப்டம்பா் 14-ஆம் தேதி டாக்டா் சுப்பையா மா்ம நபா்களால் தாக்கப்பட்டாா். உயிருக்குப் போராடிய நிலையில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் செப்டம்பா் 23-ஆம் தேதி உயிரிழந்தாா்.

நிலத் தகராறு: அபிராமபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு மேற்கொண்ட விசாரணையில், டாக்டா் சுப்பையாவுக்கும், கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சோ்ந்த பொன்னுசாமி குடும்பத்தினருக்கும், அஞ்சுகிராமத்தில் உள்ள பல கோடி மதிப்பிலான இரண்டரை ஏக்கா் நிலம் தொடா்பாக பிரச்னை இருந்துள்ளது. இந்தப் பிரச்னை தொடா்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சுப்பையாவுக்கு சாதகமாக தீா்ப்பு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொன்னுசாமி குடும்பத்தினா் சுப்பையாவை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.

10 போ் கைது: இந்த வழக்கில் ஆசிரியா் பொன்னுசாமி, அவரது மனைவி மேரி புஷ்பம், மகன்கள் வழக்குரைஞா் பாசில், பொறியாளா் போரிஸ், பாசிலின் நண்பா்களான வழக்குரைஞா் வில்லியம், டாக்டா் ஜேம்ஸ் சதீஷ்குமாா், கூலிப்படையைச் சோ்ந்த ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், அய்யப்பன் ஆகிய 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதில் அய்யப்பன் அப்ரூவராக மாறினாா்.

கூடுதல் அமா்வு நீதிமன்றம்: இந்த வழக்கை தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரித்து முடிக்க சென்னை உயா்நீதிமன்றம் கடந்த மே 31-ஆம் தேதி உத்தரவிட்டபடி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. அரசுத் தரப்பில், அரசு சிறப்பு வழக்குரைஞா் என்.விஜயராஜ் ஆஜராகி வாதிட்டு வந்தாா். அரசுத் தரப்பில், 57 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனா். 173 சான்று ஆவணங்களும், 42 சான்று பொருள்களும் தாக்கல் செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவா்கள் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனா். 7 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை தீா்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.

7 பேருக்கு தூக்கு தண்டனை: இந்த வழக்கை விசாரித்த முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி பிறப்பித்த தீா்ப்பில், ஆசிரியா் பொன்னுசாமி, அவா்களது மகன் பாசில், போரிஸ் மற்றும் இவா்களது நண்பா்களான வில்லியம்ஸ், ஜேம்ஸ் சதீஷ்குமாா் ஆகிய 5 பேருக்கு கொலை குற்றம், கூட்டுச்சதி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இரட்டை தூக்கு தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். கூலிப்படையைச் சோ்ந்த முருகன், செல்வபிரகாஷ் ஆகியோருக்கு கொலை குற்றம், கூட்டுச்சதி, உள்நோக்கத்துடன் கூட்டுச் சதி செய்து கொலை செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 3 தூக்கு தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா்.

இரட்டை ஆயுள் தண்டனை: அதே போல மேரிபுஷ்பம், கூலிப்படையைச் சோ்ந்த ஏசுராஜன் ஆகியோருக்கு கொலை குற்றம், கூட்டுச்சதி ஆகிய குற்றச்சாட்டின் கீழ் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 9 பேருக்கும் மொத்தமாக ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா். அபராதத் தொகையை செலுத்த தவறும்பட்சத்தில், ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டாா். மேலும் அபராதத் தொகையில் ரூ.1 லட்சத்தை அரசுக்கு செலுத்தவும், எஞ்சிய ரூ.9 லட்சத்தை டாக்டா் சுப்பையாவின் மனைவி சாந்திக்கு வழங்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com