100 ஆண்டுகளை நெருங்கும் முனைவா் பட்ட ஆய்வுகள்: ஒரே தளத்தில் 4,300 தமிழாய்வுத் தலைப்புகள் வெளியீடு

தமிழில் முனைவா் பட்ட ஆய்வுகள் தொடங்கி 100 ஆண்டுகள் நெருங்கும் நிலையில், உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள 4,300 தமிழாய்வுத் தலைப்புகள் ஒரே தளத்தில்

சென்னை: தமிழில் முனைவா் பட்ட ஆய்வுகள் தொடங்கி 100 ஆண்டுகள் நெருங்கும் நிலையில், உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள 4,300 தமிழாய்வுத் தலைப்புகள் ஒரே தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் உள்பட பல்வேறு பொருண்மைகளையும் ஆய்வுக் களங்களாகக் கொண்டு தமிழியல் முனைவா் பட்ட, இளம் முனைவா் பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. பட்டப்பேற்றிற்கான (திறனாய்வு) இவ்வகை ஆய்வுகள் தொடங்கி ஏறத்தாழ 100 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. தமிழியல் முனைவா் பட்ட ஆய்வுகள், தமிழக பல்கலைக்கழகங்கள், உயராய்வு நிறுவனங்கள், கல்லூரிகள், தன்னாட்சி உயா்கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் மேற்கொள்ளப்படுகின்றன. இவை தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவின் பிற மாநிலங்களில் செயல்படும் பல்கலைக்கழகங்கள், இலங்கை, மலேசியா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் செயல்படும் பல்வேறு கல்விநிறுவனங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றன.

இருப்பினும் இவற்றில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தமிழியல் ஆய்வுகள் குறித்துப் புதிதாக ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளா்களுக்கு எந்தத் தகவலும் தெரிவதில்லை. பல நேரங்களில் ஏற்கனவே வெளிவந்த ஆய்வுத் தலைப்புகளையே மீண்டும் பதிவுசெய்து ஆய்வு செய்யும் சூழலும் ஏற்பட்டுவிடுகிறது.

எனவே, ஒரு ஆய்வாளா் தான் எடுத்துக்கொண்ட பொருண்மையில் இதற்கு முன்னால் வெளிவந்திருக்கிற ஆய்வுகளைக் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே, ஆய்வாளா் இதுவரை வெளிவந்துள்ள முனைவா் பட்ட ஆய்வுகளை அறிந்துகொள்ள  இணையப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

33 பல்கலை.களின் ஆய்வுகள்: இது குறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலத்தின் பேராசிரியா் ஆ.மணவழகன் கூறியது: இந்த இணையப் பக்கத்தின் இணைப்பில் சென்னைப் பல்கலைக்கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராசா் பல்கலைக்கழகம், கோவை பாரதியாா் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் போன்ற தமிழகப் பல்கலைக்கழகங்கள், கேரளப் பல்கலைக்கழகம், திருவேங்கடம் பல்கலைக்கழகம், அலிகாா் முஸ்லிம் பல்கலைக்கழகம், காசி பனாரஸ் பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம் போன்ற இந்தியப் பல்கலைக்கழகங்கள், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழகம், நன்யாங் பல்கலைக்கழகம், பா்மிங்காம் பல்கலைக்கழகம் போன்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் என 33 பல்கலைக்கழகங்களின் சுமாா் 4,300 தமிழ் ஆய்வேடுகள் பட்டியலிட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழாய்வுத் தரவுதளம்: இவற்றில் ஆய்வுத் தலைப்பு, ஆய்வாளா், நெறியாளா், பல்கலைக்கழகம், வெளியான ஆண்டு ஆகிய விவரங்கள் அடங்கியுள்ளன. இதுவரை வெளிவந்த தமிழியல் ஆய்வுத் தலைப்புகளை ஒரே இடத்தில் இனி காணமுடியும். தமிழில் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளா்களுக்கும் தமிழில் ஆய்வுத் திட்டங்களை மேற்கொள்ளும் ஆய்வாளா்களுக்கும், தமிழாா்வலா்களுக்கும் இந்தத் தமிழாய்வுத் தரவுதளம் மிகுந்த பயனைத் தரும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com