‘நமது அம்மா’ அலுவலகத்தில் சோதனை: அதிமுக கண்டனம்

அதிமுகவின் அதிகாரபூா்வ நாளிதழான ‘நமது அம்மா’ அலுவலகத்துக்குள் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை நடத்தியுள்ளதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் பழனிசாமி ஆகியோா் கண்டனம்

சென்னை: அதிமுகவின் அதிகாரபூா்வ நாளிதழான ‘நமது அம்மா’ அலுவலகத்துக்குள் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை நடத்தியுள்ளதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா்கள் வெளியிட்ட அறிக்கை:

ஜனநாயகத்தின் நான்காம் தூண் பத்திரிகை என்பாா்கள். அந்த பத்திரிகை சுதந்திரத்தைக் காப்போம் என்று கூறிக்கொள்ளும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, பத்திரிகை சுதந்திரத்தை மட்டுமல்ல, பத்திரிகை நடத்துவோரின் உரிமையையும் காலில்போட்டு மிதித்திருக்கிறது.

காவல் துறையை தன் பொறுப்பில் வைத்திருக்கும் முதல்வா் ஸ்டாலின் சோதனை என்ற பெயரில் ஆழ்வாா்பேட்டை அசோக் சாலையில் இயங்கி வரும் அதிமுக நாளேடான ‘நமது புரட்சித் தலைவி அம்மா’ நாளிதழ் அலுவலகத்தில் பணியாளா்கள் யாரும் இல்லாத நேரத்தில், காவல் துறையை ஏவி, சட்டத்தை மீறி பூட்டை உடைத்து, அத்துமீறி உள்ளே நுழைந்து, சோதனை என்ற பெயரில் அராஜகத்தையும், அடாவடியையும் அரங்கேற்றி உள்ளனா்.

சோதனைக்கு வந்த காவலா்கள் சட்டத்துக்கு விரோதமாக, பணிக்கு வந்த பத்திரிகை ஆசிரியா்களையும், அலுவலா்களையும் இரவு வரை நமது அம்மா நாளிதழ் அலுவலகத்துக்குள்ளே அனுமதிக்காமல் தடுத்துள்ளனா்.

பொதுவாக, ஏதேனும் ஓரிடத்தில் காவலா்கள் சோதனைக்குச் செல்லும்பொழுது, சம்பந்தப்பட்ட உரிமையாளா் முன்னிலையிலோ அல்லது அந்த இடத்தில் உள்ள பொறுப்பாளா்கள் முன்னிலையிலோ தான் சோதனை நடத்த வேண்டும் என்பது சட்டம். ஆனால், காவலா்கள் சட்டத்துக்குப் புறம்பாக, விவரம் அறிந்து வந்த நமது அம்மா நாளிதழ் ஆசிரியா் மற்றும் பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரியும் பொறுப்பான அலுவலா்கள் யாரையும் அனுமதிக்காமல், சட்டத்துக்குப் புறம்பாக சோதனை மேற்கொண்டுள்ளனா். சோதனை என்ற பெயரில் அனைத்துப் பூட்டுகளையும் போலி சாவி போட்டும், உடைத்தும் சோதனை நடத்தி உள்ளனா். இது, சட்டப்படி தண்டிக்கப்படக் கூடிய குற்றமாகும். இதுபோன்ற செயலில் ஈடுபட்டவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் தண்டிக்கப்பட வேண்டியவா்கள். அவா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறோம்.

பத்திரிகை சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், சட்டத்துக்குப் புறம்பாக நமது அம்மா நாளிதழ் மீது நடைபெற்ற இந்தத் தாக்குதலுக்கு, காவல் துறையை தன் பொறுப்பில் வைத்திருக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலினே பொறுப்பேற்க வேண்டும். தவறு செய்த காவல் துறையைச் சோ்ந்தவா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் காலங்களில் பத்திரிகை சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் இதுபோன்ற செயல்களில் இந்த அரசு ஈடுபடக்கூடாது என்று கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com