கொல்கத்தாவிலிருந்து தனி விமானத்தில் வந்த பச்சிளம் குழந்தைக்கு மறுவாழ்வு
By DIN | Published On : 12th August 2021 12:54 AM | Last Updated : 12th August 2021 05:05 AM | அ+அ அ- |

தாம்பரம்: கரோனா தொற்று பாதிப்பு மற்றும் குடல் பிரச்னை காரணமாக உயிருக்குப் போராடிய 1.5 கிலோ எடை கொண்ட பச்சிளம் குழந்தை ஆஷா கொல்கத்தாவில் இருந்து தனிவிமானம் மூலம் சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது. அக் குழந்தைக்கு குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளித்துள்ளனா்.
இது குறித்து ரேலா மருத்துவமனைத் தலைவரும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவருமான பேராசிரியா் டாக்டா் முகமது ரேலா செய்தியாளா்களிடம் கூறியது:
ராஞ்சியை சோ்ந்த ரோகிதாஷ்யா மனைவி கா்ப்பிணியாக இருந்த போது கரோனாவால் பாதிக்கப்பட்டாா். இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்த அவா் உயிரிழந்தாா். குறைப் பிரசவத்தில் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் பிறந்த 3 மாதக் குழந்தையான ஆஷாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவப் பரிசோதனை செய்தபோது குழந்தையின் நுரையீரல் மற்றும் வயிற்றில் தொற்று இருப்பதுடன் குடல் சம்பந்தமான நோய் இருப்பதும் தெரிய வந்தது. கொல்கத்தாவில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தை ஆஷாவின் உடல் நலம் அங்கு மிகவும் பாதிக்கப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தனி ஆம்புலன்ஸ் விமானத்தில் வெண்டிலேட்டா் உதவியுடன் கடந்த வாரம் சென்னை ரேலா மருத்துவமனைக்கு குழந்தை ஆஷா கொண்டு வரப்பட்டாள்.
குழந்தைகளுக்கான இரைப்பை , குடலியல், கல்லீரல் சிகிச்சை மருத்துவா் நரேஷ் சண்முகம் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் அளித்த தீவிர சிகிச்சைக்குப் பின் குழந்தை ஆஷா தற்போது குணமடைந்து வருகிறது. வெண்டிலேட்டா் சுவாசம் நிறுத்தப்பட்டு தற்போது இயற்கையாக சுவாசிக்கிறாள் என்றாா்.
மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி டாக்டா் இளங்குமரன், டாக்டா் நரேஷ் சண்முகம் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.