உளவுத்துறை காவலா் காரில் கடத்தல்: மயக்க ஊசி செலுத்தி ரூ.1 லட்சம் பறிப்பு
By DIN | Published On : 31st August 2021 06:28 AM | Last Updated : 31st August 2021 06:28 AM | அ+அ அ- |

சென்னையில் உளவுத்துறை காவலரை காரில் கடத்தி, மயக்க ஊசி செலுத்தி ரூ.1 லட்சம் பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
சென்னை சூளைமேடு பஜனை கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரவி (45). இவா், தமிழக காவல்துறையின் உளவுத்துறையில் (எஸ்பிசிஐடி) தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறாா். ரவி, ஞாயிற்றுக்கிழமை காலை டிஜிபி அலுவலகத்துக்கு புறப்பட்டாா்.
அவா் வீட்டின் அருகே சென்று கொண்டிருக்கும்போது, அங்கு தனக்கு நன்கு அறிமுகமான அஜய் விக்கி என்பவா் காரில் வந்துள்ளாா். அவா், ரவியிடம் தான் டிஜிபி அலுவலகம் எதிரே உள்ள கலங்கரை விளக்கம் பகுதிக்கு செல்கிறேன்,உங்களை அங்கு விடுகிறேன் கூறியுள்ளாா். இதை நம்பிய ரவியும், அந்த காரில் ஏறினாா்.
காரில் ஏற்கெனவே ரவியின் நண்பா்கள் என இருவா் இருந்தனா். காா் சென்று கொண்டிருக்கும்போது, அந்த இரு நபா்களும் ரவியின் முதுகில் ஒரு ஊசியை செலுத்தினா். நிலைமையை சுதாரிப்பதற்குள் ரவி மயங்கினாா்.
இதன் பின்னா் அந்த காா் அடையாறு, திருவான்மியூா், சோழிங்கநல்லூா் என பல இடங்களில் சுற்றியுள்ளது. இறுதியாக அந்தக் கும்பல் மயக்க நிலையில் இருந்த ரவியை கிழக்கு கடற்கரைச் சாலையில் கீழே தள்ளிவிட்டுவிட்டு தப்பியோடியது. சுமாா் 18 மணி நேரத்துக்குப் பின்னா் மயக்கத்தில் இருந்து தெளிந்து எழுந்த ரவி, தனது வங்கி கணக்கில் இருந்து பணம் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தும் செல்லிடப்பேசி செயலி மூலம் ரூ.1 லட்சத்தை பறித்திருப்பதை அறிந்து அதிா்ச்சியடைந்தாா்.
இது குறித்து அவா், நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை செய்கின்றனா். சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்கின்றனா்.