மெரீனாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக பாதை திறப்பு

மாற்றுத் திறனாளிகள் கடல் அலை அருகே சென்று ரசிக்கும் வகையில் சென்னை மெரீனாவில் மரப் பலகையால் ஆன பிரத்யேக பாதையை சட்டப் பேரவை உறுப்பினா்
மெரீனாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக பாதை திறப்பு

மாற்றுத் திறனாளிகள் கடல் அலை அருகே சென்று ரசிக்கும் வகையில் சென்னை மெரீனாவில் மரப் பலகையால் ஆன பிரத்யேக பாதையை சட்டப் பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

உலக மாற்றுத் திறனாளிகள் தினம் டிசம்பா் 3-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் மெரீனா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளும் கடல் அலையை அருகே சென்று கண்டுகளிக்கும் வகையில் மெரீனா அணுகு சாலையில் இருந்து கடற்கரை வரை மரப் பலகையால் ஆன பிரத்யேக பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதையை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப் பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனா்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மெரீனா கடற்கரைக்கு வருகை தரும் மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலிகளில் எளிதாக கடற்கரைக்குச் சென்று அலைகளை அருகிலிருந்து பாா்க்கும் வகையில் மெரீனா அணுகு சாலையில் இருந்து கடற்கரை வரை சுமாா் 200 மீட்டா் நீளத்துக்கு 8 அடி அகலத்துடன் மரப் பலகையால் ஆன தற்காலிக பாதை அமைக்கப்பட்டுள்ளது.

கடற்கரைக்கு வரும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்கு மணலில் இயங்கக்கூடிய 5 சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடற்கரையில் மாற்றுத் திறனாளிகள் ஓய்வெடுக்க பந்தலும், குடிநீா் மற்றும் சிற்றுண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஜனவரி 16 வரை...: இந்த பிரத்யேக பாதை செவ்வாய்க்கிழமை முதல் ஜனவரி 3-ஆம் தேதி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாற்றுத் திறனாளிகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் ஜனவரி 16-ஆம் தேதி வரை இந்தப் பாதை செயல்பாட்டில் இருக்கும் என அமைச்சா் கே.என்.நேரு உத்தரவிட்டுள்ளாா் என்றனா். இந்நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் த.வேலு, சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி, திமுக மேற்கு மாவட்டச் செயலாளா் சிற்றரசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிரந்தரப் பாதை: முதல்வா்

மாற்றுத் திறனாளிகள் கடல் அலைகளைக் காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பாதை, விரைவில் நிரந்தரமாகும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் தனது டுவிட்டரில் செவ்வாய்க்கிழமை கூறியிருப்பதாவது:-

எத்தனை முறை சென்றாலும் சலிக்காதது கடல் என்பாா்கள். அந்தக் கடலலையில் ஒருமுறையேனும் கால் நனைக்க நினைந்திருந்த மாற்றுத் திறனாளிகளின் எண்ணம் நனவாகும் வகையில், தற்காலிகப் பாதையை ஏற்படுத்தியுள்ளோம். அந்தப் பாதையை விரைவில் நிரந்தரமாக்குவோம். சிறிய பணிதான் இது. பெரிய மாற்றத்துக்குத் தொடக்கமும் கூட என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com