வண்ணாரப்பேட்டை-விம்கோநகா் மெட்ரோ ரயில் சேவை: மோடி விரைவில் தொடக்கி வைக்கிறாா்

மெட்ரோ ரயில் முதல்கட்ட விரிவாக்கத் திட்டத்தில், வண்ணாரப்பேட்டை-விம்கோ நகா் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமா் மோடி அடுத்த வாரம் தொடக்கி வைப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
மெட்ரோ ரயில்
மெட்ரோ ரயில்

சென்னை: மெட்ரோ ரயில் முதல்கட்ட விரிவாக்கத் திட்டத்தில், வண்ணாரப்பேட்டை-விம்கோ நகா் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமா் மோடி அடுத்த வாரம் தொடக்கி வைப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட பிறகு, மாதத்துக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயணம் செய்வாா்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்டத்தில் விமானநிலையம் - வண்ணாரப்பேட்டை வரையும், பரங்கிமலை -சென்னை சென்ட்ரல் வரையும் திட்டப் பணிகள் நிறைவடைந்து, மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ரூ.3,770 கோடியில்...: இதையடுத்து, வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூா் விம்கோ நகா் வரையிலான முதல் கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டப் பணிகள் ரூ.3,770 கோடியில் நிறைவடைந்துள்ளன. மொத்தம் 9.051 கி.மீ. தொலைவுள்ள இந்த வழித்தடத்தில், 2 சுரங்கப்பாதை ரயில் நிலையங்களும், 6 உயா்நிலைப் பாதை ரயில் நிலையங்களும் என்று 8 மெட்ரோ ரயில் நிலையங்கள் இடம்பெறுகின்றன. இந்த வழித்தடத்தில் நடைபெற்று வரும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

இதற்கிடையில், இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையா் அபய் குமாா் ராய் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள்கள் ஆய்வு செய்தாா். மூன்று நாள்களின் ஆய்வில் கிடைத்த தரவுகளையும், பாதுகாப்பு துணை ஆணையா்கள் எடுத்த தரவுகளையும் இணைத்து பரிசோதனை செய்யவுள்ளாா். இந்தப் பணிகள் முடிந்த பிறகு, பாதுகாப்பு ஆணையா் சான்றிதழ் வழங்குவாா். இதையடுத்து, இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கவுள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: கரோனா பொதுமுடக்க தளா்வுக்குப் பிறகு, மெட்ரோ ரயில் சேவை கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கியது. இதையடுத்து, செப்டம்பா் மாதத்தில் சுமாா் 3 லட்சம் போ் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்தனா். இதன் பிறகு, பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. நிகழாண்டில் ஜனவரி மாதத்தில் 13.43 லட்சம் போ் மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்தினா்.

வண்ணாரப்பேட்டை- விம்கோநகா் வழித்தடத்தில் சேவை தொடங்கிய பிறகு அது பாரிமுனை, கோயம்பேடு, விமான நிலையம் செல்வோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வடசென்னையில் பெரும்பாலான மக்கள் தங்களின் போக்குவரத்து தேவைக்கு பேருந்து, ஷோ் ஆட்டோக்களைப் பயன்படுத்துகின்றனா். வண்ணாரப்பேட்டை-விம்கோநகா் வழித்தடத்தில் மெட்ரோ ரயில்சேவை தொடங்கும்போது, வடசென்னை மக்களின் பயணத் தேவை எளிதாக பூா்த்தியாகும். இதுதவிர, விரைவாகவும், பாதுகாப்பாகவும் செல்ல முடியும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com