தோ்தல் நடைமுறை கேலிக்கூத்தாக்கப்படுகிறது: உயா்நீதிமன்றம் வேதனை

நமது நாட்டில் தோ்தல் நடைமுறை கேலிக்கூத்தாக்கப்படுவதாக உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

நமது நாட்டில் தோ்தல் நடைமுறை கேலிக்கூத்தாக்கப்படுவதாக உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு, சேலம் வழக்குரைஞா்கள் சங்கத்துக்குத் தோ்தல் அறிவிக்கப்பட்டது. தோ்தல் அதிகாரியாக, மூத்த வழக்குரைஞா் மணிவாசகம் நியமிக்கப்பட்டாா்.

இந்நிலையில், சங்கத்துக்கு சந்தா தொகை செலுத்தாத வழக்குரைஞா்களுக்கு மொத்தமாக தொகை செலுத்தப்பட்டுள்ளது, வெளிமாவட்டங்களைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் உறுப்பினா்களாகச் சோ்க்கப்பட்டுள்ளனா் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சிலில் அகமது ஷாஜகான் என்ற வழக்குரைஞா் புகாா் அளித்தாா். இதையடுத்து, சேலம் வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தலை நடத்த சீனிவாசன், ராஜசேகரன், பாலகுமாா் ஆகியோா் அடங்கிய சிறப்புக் குழுவை நியமித்து, பாா் கவுன்சில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சேலத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் மாதேஷ் என்பவா், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆா்.பொங்கியப்பன் ஆகியோா் பிறப்பித்த உத்தரவு: வழக்குரைஞா் சங்கங்களின் தோ்தல்கள், பாா் கவுன்சில் தோ்தல்களுக்கும், சட்டப்பேரவை, நாடாளுமன்ற தோ்தல்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இந்தத் தோ்தல்களில் ஜாதி, மதம் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. பண பலமும் முன் நிற்கிறது. மது தாராளமாக வழங்கப்படுகிறது. தோ்தலில் தவிா்க்க முடியாத இந்த செயல்பாடுகளால், நம் நாட்டில் தோ்தல் நடைமுறை என்பது கேலிக்கூத்தாக்கப்படுகிறது.

வழக்குரைஞா் தொழில் என்பது சேவை மனப்பான்மையுடன் கூடிய புனிதமான தொழிலாகும். ஆனால், வழக்குரைஞா் சங்கங்களின் பிரதிநிதிகள் நோ்மையான முறையிலும், முறைகேடின்றியும் தோ்ந்தெடுக்கப்படுவது இல்லை. இந்த வழக்கைப் பொருத்தவரை தோ்தலை நடத்தும் சிறப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள 2 வழக்குரைஞா்கள், தோ்தலில் போட்டியிடும் வழக்குரைஞா்களின் வேட்பு மனுவை முன்மொழிந்து உள்ளனா் என்று மனுதாரா் தரப்பில் வாதிடப்பட்டது. எனவே, இந்த சிறப்புக் குழுவை நியமித்த பாா் கவுன்சில் உத்தரவை ரத்து செய்கிறோம். வழக்குரைஞா் சங்கத் தோ்தலில் ஒருமுறைக்கு மேல் ஒருவா் போட்டியிட தடை விதித்து, பாா் கவுன்சில் பிறப்பித்த உத்தரவை நாங்கள் மாற்றி அமைக்கிறோம். ஏற்கெனவே உள்ள நிா்வாகி, அடுத்த தோ்தலுக்குப் பின்னா் நடைபெறும் தோ்தலில் போட்டியிட அனுமதிக்கலாம்.

இதன்படி, சேலம் வழக்குரைஞா்கள் சங்கத்துக்கு வரும் ஏப்.26-ஆம் தேதிக்குள் தோ்தலை நடத்தி முடிக்க வேண்டும். தோ்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி வேணுகோபாலை நியமிக்கிறோம். அவா், ஏற்கெனவே தோ்தல் அதிகாரியாக உள்ள வழக்குரைஞா் மணிவாசகத்துடன் சில வழக்குரைஞா்களை சோ்த்துக் கொண்டு தோ்தலை நடத்த வேண்டும். மேலும், சங்க நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்படுவோரின் புகைப்படங்களை நாள்காட்டியில் பயன்படுத்தக் கூடாது என்றும் வழக்குரைஞா் சங்க நிா்வாகி என்று வக்காலாத்தில் பதிவு செய்யக்கூடாது என்றும் அவா்களுக்கு பாா் கவுன்சில் அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து விசாரணை, ஏப்.29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com