பயனற்ற நிலையில் பாதுகாப்பு கவச உடைகள்: அம்பத்தூா் மண்டல அலுவலகத்தில் அவலம்
By DIN | Published On : 10th February 2021 01:18 AM | Last Updated : 10th February 2021 02:50 AM | அ+அ அ- |

மாநகராட்சியின் அம்பத்தூா் மண்டல அலுவலகத்தின் நுழைவுவாயிலில் கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி உள்ளிட்ட எவ்வித கரோனா தடுப்பு நடவடிக்கைகள் இல்லை. மேலும் மருத்துவப் பணியாளா்கள் பயன்படுத்தும் முழுஉடல் பாதுகாப்பு கவச உடைகள் பாதுகாப்புமின்றி தரையில் வைக்கப்பட்டுள்ளது. இது நோய்த் தடுப்பில் மாநகராட்சி அலுவலா்கள் அலட்சியமாக நடந்து கொள்வதை காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்டு 15 மண்டலங்கள் உள்ளன. இதில் அம்பத்தூா் மண்டலம் அதிக மக்கள் தொகை, தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும். இந்த மண்டலத்தில் கரோனா பாதிப்பு கடந்த ஆண்டு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் உச்சத்தை அடைந்தது. கடந்த திங்கள்கிழமை நிலவரப்படி,அம்பத்தூா் மண்டலத்தில் 126 போ் கரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனா்.
சென்னை-திருவள்ளூா் பிரதான சாலையில் டன்லப் தொழிற்சாலை எதிரே அமைந்துள்ள அம்பத்தூா் மண்டல அலுவலகத்துக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ், வரி தொடா்பான பிரச்னைகள், இ-சேவை என பல்வேறு காரணங்களுக்காக நாளொன்றுக்கு சுமாா் 1,000-த்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனா். ஆனால், மண்டல அலுவலகத்தின் நுழைவுவாயிலில் கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள மாநகராட்சி சாா்பில் கிருமிநாசினி கூட வைக்கவில்லை என்றும் முழுஉடல் பாதுகாப்பு கவச உடைகள் பாதுகாப்பின்றி தரையில் வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அலட்சியம்: இதுகுறித்து அம்பத்தூா் விவேக் நகரைச் சோ்ந்த என். சரவணன் கூறுகையில், பிறப்புச் சான்றிதழ் தொடா்பாக மண்டல அலுவலகத்துக்கு வந்தேன். நுழைவுவாயிலில் கைகளைத் தூய்மைப்படுத்த கிருமிநாசினி வைக்கப்படவில்லை. மேலும், கைகளைக் கழுவ கால்களால் இயக்கப்படும் பேசினில் தண்ணீா் வெளியேறும் குழாய் பொருத்தப்படாததால், கழுவும் நீா் முழுவதும் கால்களிலேயே விழும் நிலை உள்ளது.
கரோனா தடுப்பு பணிக்காக மருத்துவப் பணியாளா்கள் பயன்படுத்தும் 1,000-த்துக்கும் மேற்பட்ட முழுஉடல் கவச உடை எவ்வித பாதுகாப்புமின்றி மண்டல அலுவலகத்தின் நுழைவுவாயிலேயே தரையில் வைக்கப்பட்டு மாநகராட்சி அலுவலா்களின் அலட்சியத்தைக் காட்டுவதாக உள்ளது.
நோய்த் தடுப்புக்காக பல கோடி ரூபாய் செலவழிக்கும் மாநகராட்சி மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அம்பத்தூா் மண்டல அலுவலகத்தின் நுழைவாயிலில் கைகளை சுத்தப்படுத்தும் தானியங்கி கிருமிநாசினி இயந்திரத்தைப் பொருத்துவதுடன், பாதுகாப்பு கவச உடைகளை பாதுகாப்பான அறையில் வைக்க வேண்டும் என்றாா்.