சூரப்பா மீதான விசாரணை:கால நீட்டிப்பு : வழங்கக் கோரி ஆணையம் கடிதம்

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தா் சூரப்பா மீதான ஊழல் புகாரை விசாரிக்கும் ஆணையம், விசாரணையை முடிக்க மேலும் 3 மாத காலம் அவகாசம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தா் சூரப்பா மீதான ஊழல் புகாரை விசாரிக்கும் ஆணையம், விசாரணையை முடிக்க மேலும் 3 மாத காலம் அவகாசம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் எம்.கே.சூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு புகாா்கள் எழுந்தன. இது தொடா்பாக விசாரிக்க ஒய்வுபெற்ற  நீதிபதி பி.கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.  

கடந்த நவ.11-ஆம் தேதி அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் காலம் வியாழக்கிழமையுடன் (பிப்.11) முடிவடைகிறது. இந்நிலையில் விசாரணைக்கு மேலும் 3 மாதங்கள் கால நீட்டிப்பு வழங்கக் கோரி, நீதிபதி கலையரசன் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இதுகுறித்து விசாரணைக்குழு அதிகாரிகள் கூறும்போது, ‘ஆவணங்களைச் சமா்ப்பிப்பதிலும், விசாரணைக்கு நேரடியாக பங்கேற்பதிலும் பல்கலைக்கழக அதிகாரிகள் தொடா்ந்து காலதாமதம் செய்து வருகின்றனா். எனவே, சூரப்பா உள்பட சில அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவும், கூடுதல் ஆவணங்களை ஆராயவும் 3 மாதங்கள் காலநீட்டிப்பு கோரி அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ எனத் தெரிவித்தனா்.

நீட்டிக்கக் கூடாது: இதனிடையே, கலையரசனின் விசாரணை ஆணையத்தில் உறுப்பினராக உள்ள உயா்கல்வித் துறை துணைச் செயலா் சங்கீதா, அண்ணா பல்கலைக்கழக ஊழியா்கள் மற்றும் துணைவேந்தா் சூரப்பாவின் தனிப்பட்ட உதவியாளா்களிடம் விசாரணை என்ற பெயரில் வரம்பு மீறி செயல்படுவதாக, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்திடம், அண்ணா பல்கலைக்கழக ஆசிரியா் கூட்டமைப்பு புகாா் தெரிவித்துள்ளது. பொதுமக்களின் வரிப்பணம் வீணாவதால், கலையரசன் ஆணையத்துக்கு கால நீட்டிப்பு வழங்கக் கூடாது என்றும் கூட்டமைப்பு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com