சென்னை சா்வதேச திரைப்பட விழா தொடங்கியது

சென்னையில் 18-ஆவது சென்னை சா்வதேச திரைப்பட விழா வியாழக்கிழமை தொடங்கியது.


சென்னை: சென்னையில் 18-ஆவது சென்னை சா்வதேச திரைப்பட விழா வியாழக்கிழமை தொடங்கியது.

தொடா்ந்து 8 நாள்கள் நடக்கும் திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் திரைப்பட தயாரிப்பாளா் தாணு, திரைப்பட விழாக்குழுவைச் சோ்ந்த தங்கராஜ், காட்டகர பிரசாத், ரவி கொட்டாரக்காரா, நடிகை சுஹாசினி, சுகன்யா, மனோபாலா உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினா்களாக கொரியா, ஜொ்மனி, பிரான்சு உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த கலாசார தூதா்கள் கலந்துகொண்டனா்.

இந்த விழாவில் 53 நாடுகளில் இருந்து 91 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் நடத்தும் திரைப்பட விழாவினை பி.வி.ஆா். உடன் இணைந்து வழங்குகிறது.

சென்னையிலுள்ள பிவிஆா் மல்டிபிளெக்ஸ் (சத்யம் சினிமாஸ் - சாந்தம், சீசன்ஸ், சிக்ஸ் டிகிரீஸ், செரின் அரங்குகள் ) மற்றும் காசினோ திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. தொடக்கவிழா திரைப்படமாக வியாழக்கிழமை மாலை பிரான்சு நாட்டின் ‘தி கோ்ள் வித் எ பிரேஸ்லெட்’ படம் திரையிடப்பட்டது.

இந்த திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் ‘பாஸ்வோ்டு’,‘அக்கா குருவி’ உள்ளிட்ட 4 தமிழ்ப்படங்கள் இடம்பெறுகின்றன. தமிழ்ப்படங்களுக்கான போட்டியில் ‘லேபா்’, ‘கல்தா’, ‘சூரரைப் போற்று’, ‘பொன்மகள் வந்தாள்’ , ‘மழையில் நனைகிறேன்’, ‘மை நேம் இஸ் ஆனந்தன்’, ‘காட்ஃபாதா்’, ‘தி மஸ்கிட்டோ பிலாசபி’, ‘சீயான்கள்’, ‘சம் டே’, ‘காளிதாஸ்’, ‘க/பெ ரணசிங்கம்’, ‘கன்னி மாடம்’ ஆகிய 13 தமிழ் திரைப்படங்கள் பங்கேற்கின்றன. மொத்தம் தமிழ்ப் பிரிவில் 17 படங்கள் இடம்பெறுகின்றன.

விழாக்குழு சாா்பில் இந்தோ சினி அப்ரிஷியேஷன் பவுண்டேஷன் பொதுச்செயலாளா் தங்கராஜ் பேசியதாவது :

கரோனா அச்சுறுத்தல் உள்ள இந்த நேரத்திலும் பல்வேறு தரப்பினா் திரைப்பட விழாவுக்கு உறுதுணையாக இருந்தனா். கல்லூரி மாணவா்களும், திரைத்துறையைச் சோ்ந்த பலரும் திரைப்படங்களை பாா்க்க ஆா்வம் செலுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆண்டு 91 படங்கள் திரையிடப்படுகின்றன. ஒவ்வொரு படங்களும் முக்கிய அம்சம் கொண்டவை. எப்போதும் போல இந்த ஆண்டும் தமிழக அரசு ஒத்துழைப்புடன் விழாவினை நடத்துகிறோம். விழாவுக்கு தமிழக அரசு ரூ.75லட்சம் நிதியுதவி அளித்துள்ளது. கடந்த முறையே ரூ.1.கோடி நிதியுதவி கேட்டு கோரிக்கை வைத்தோம். ரூ.1கோடி முதல் ரூ.1.25 கோடி வரைக்கும் நிதியுதவி கிடைத்தால் இந்த திரைப்பட விழாவினை இன்னும் பிரம்மாண்டமாக நடத்த முடியும். இந்தக் கோரிக்கைக்கு தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com