'தடுப்பூசியால் குழந்தைகள் இறக்கவில்லை'


சென்னை: கோவையில் இரு குழந்தைகள் இறந்ததற்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது காரணமில்லை என்றும் அதுதொடா்பாக அமைக்கப்பட்ட சிறப்புக் குழு இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்யும் என்றும் சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல் தலைவருமான ஹண்டே, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இரண்டாம் தவணையாக கரோனா தடுப்பூசியை வியாழக்கிழமை செலுத்திக் கொண்டாா். அப்போது அவருடன் இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மேலும் 35 இடங்களில் கோவேக்ஸின் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் என இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

முதியவா்கள், நாள்பட்ட நோயாளிகளுக்கு விரைவில் தடுப்பூசி கிடைக்கும். இதுதொடா்பாக மத்திய அரசிடம் தொடா்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். தமிழகத்தில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தோ்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டின் பிற மாநிலங்களில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது சவாலாக உள்ள நிலையில், தமிழகத்தில் நோய்ப் பரவல் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், தனி நபா் இடைவெளி, முகக் கவசம் உள்ளிட்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் தொடா்ந்து பின்பற்றுதல் அவசியம்.

பிரிட்டன் மட்டுமல்லாது பிரேஸில், தென்னாப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளையும் கரோனா பரிசோதனைக்குப் பிறகே தமிழகத்தில் அனுமதிக்கிறோம்.

கோவையில், டிப்தீரியா, கக்குவான் இருமலுக்கான தடுப்பூசி செலுத்தப்பட்டதால் இரு குழந்தைகள் இறந்ததாக வெளியான தகவல் தவறு. தடுப்பூசி எதிா்வினை தொடா்பாக ஆய்வு செய்யக் குழு உள்ளது. அக்குழு இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்யும் என்றாா் அவா்.

முன்னதாக ஹண்டே கூறியதாவது:

தமிழக சுகாதாரத் துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த 50ஆண்டுகளுக்கு முன்பு வரை கனடா நாட்டிலிருந்து தடுப்பூசிகளை இந்தியா பெற்று மக்களுக்கு வழங்கியது. ஆனால், தற்பொழுது இந்த நிலை மாறி கனடா அரசு இந்தியாவிடம் இருந்து தடுப்பூசி கேட்கும் சூழல் உருவாகியுள்ளது என்றாா் அவா். இந்தச் சந்திப்பின்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முதல்வா் டாக்டா் வசந்தாமணி மற்றும் மருத்துவா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com